Friday, August 2, 2013

கடல்நீர் இனிக்கிறது!





கடல்நீர் இனிக்கிறது!
-   பா. கேசவன்





இளங்கோ மற்றும் மாறன் பள்ளிக்குப் போகிறார்கள்.
வேலன் மற்றும் பாலன் நண்பர்கள்.
இராவணன் மற்றும் கும்பகர்ணன் சகோதரர்கள்.
மாதவி இசை மற்றும் நடனம் பயின்றாள்.
யானை மற்றும் குதிரை வந்தன.

இவற்றைக் கேட்டதும் என்ன எண்ணுகிறீர்கள்? ஏதோ ஒரு புதிய மொழிபோல் தோன்றுகிறதா? அல்லது வேடிக்கையாக இருக்கிறதா? சே! சே! இது என்ன தமிழா?” என்று செவியைப் பொத்திக்கொள்கிறீர்களா?
ஆம், தமிழ்ச் செவி இவற்றை ஏற்காது. தமிழைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடேன் என்ற தமிழ் நெஞ்சம் இத்தகைய தொடர்களைக் கண்டு கொதித்தெழும். ஆனால், தமிழ் செய்த பாவமோ அல்லது தமிழன் செய்த பாவமோ இப்படிப்பட்ட தொடர்களைக் கேட்டும் படித்தும் தொலைக்க வேண்டியிருக்கிறது. தமிழும் ஆங்கிலமும் கற்றுத் துறைபோகிய மேதாவிகளின் நற்பணியே இத்தகைய மொழிக் கொலைக்குக் காரணம். ஆங்கிலத்திலே இவர்கள் இப்படிப் பிழையாக எழுதுவரோ? எழுதமாட்டார்கள். பிழை நேரக் கூடாதே என்பதில் மிகமிகக் கவனமாக இருப்பார்கள்.
     ஆங்கில நினைவு தோன்றும்போது எழும் மொழி வனப்பு, தமிழ் நினைவு தோன்றும்போது ஏன் எழுவதில்லை? தமிழ்த்தாயை எவ்வாறாவது குலைக்கலாம்; ஆங்கிலத் தாயை ஓம்பினால் போதும் என்னும் எண்ணம் இந்நாட்டவர்க்கு உதித்திருக்கிறது போலும்! ஈன்ற தாய் பட்டினி! மற்றத் தாய்க்கு நல்லுணவு! என்னே காலத்தின் கோலம்!  (திரு. வி..)
ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளுக்கு முன் தமிழ்த் தென்றல் திரு. வி.. கூறியது இன்றும் பொருந்துவதைக் காணும்போது தமிழின் நிலையையும் தமிழரின் நிலையையும் என்னென்று உரைப்பது!
கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்ட தொடர்களைப் பிழை நீக்கி முறையாக அமைக்கும்போது அவை பின்வருமாறு அமையும்:
இளங்கோவும் மாறனும் பள்ளிக்குப் போகிறார்கள்.
வேலனும் பாலனும் நண்பர்கள்.
இராவணனும் கும்பகர்ணனும் சகோதரர்கள்.
மாதவி இசையும் நடனமும் பயின்றாள்.
யானையும் குதிரையும் வந்தன.
இப்படி அமைவதே தமிழ் மரபு; தமிழ் இலக்கண நெறி; தொல்காப்பியர் காலத்துக்கு முன்பிருந்தே இருந்துவரும் வழக்கு.
இருக்கின்ற இடத்தைவிட்டு
இல்லாத இடந்தேடி
எங்கெங்கோ அலைகின்றார்
ஞானத் தங்கமே! அவர்
ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே!”
என்ற பாடல்தான், தமிழ் மரபுக்கு ஒவ்வாத தொடர்களை வலிந்து திணித்துத் தமிழுக்கு ஊறு விளைவிக்கும் மேதைகளை எண்ணும்போது நம் நினைவுக்கு வருகிறது. தொடக்கத்தில் குறிப்பிடப்பட்டவை போன்ற தொடர்களை நல்ல தமிழறிஞர் எழுத்துக்களில் எங்கும் காண முடியாது. அதாவது எண்ணும்மைக்குப் பதிலாக மற்றும் என்னும் சொல்லை வைப்பதைக் காண முடியாது. ‘எண்ணும்மைக்குப் பதிலாக மற்றும் என்னும் சொல்லைப் பயன்படுத்துவோர், ஆங்கிலத்தில் உள்ள ‘and’ என்னும் சொல்லுக்கு ஈடாக மற்றும் என்னும் சொல்லை வழங்குகிறோம் என்னும் விந்தையான விளக்கத்தையும் தருகிறார்கள். ஆங்கிலத்தில் ‘and’ என்னும் சொல் வரும் இடங்களில் எல்லாம் தமிழில் எப்படி இருக்கும் என்பதைக் கீழ்வரும் தொடர்களைத் தமிழாக்கம் செய்து பார்த்தாலே புரிந்துகொள்ளலாம்.
     Work hard and you will pass the examination;
     For hours and hours;
     Better and Better
     We knocked and knocked
இந்தத் தொடர்களைத் தமிழாக்கும்போது, ‘and’ என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு ஈடாக மற்றும் என்னும் சொல்லை அமைத்தால், அது வியப்புக்குரியதாக மட்டுமன்று; பொருளும் விபரீதமாகிவிடும்.
     பறவைகள் பல விதம் அவை
     ஒவ்வொன்றும் ஒரு விதம்
என்பது போல, ஒவ்வொரு மொழியும் ஒவ்வொரு விதம். அதாவது ஒவ்வொரு மொழியும் தனித்தன்மை வாய்ந்தது. ஒவ்வொரு மொழிக்கும் தனிமரபு உண்டு. அந்தத் தனித்தன்மையும் மரபும் போற்றிக் காக்கப்படும்போதுதான் மொழியின் இனிமையும் செம்மையும் குலையாதிருக்கும்.
மாறன் மற்றும் இளங்கோ பள்ளிக்குப் போகிறார்கள் என்பது போன்ற வாக்கியங்கள் பிழையெனக் கண்டோம். வேறு சிலர் இன்னும் ஒரு படி மேலே போய், இரட்டிப்புப் பிழை செய்கிறார்கள். அவர்கள் மற்றும்’, ஆகிய என்னும் இரு சொற்களையும் வாக்கியத்திலே அமைத்து,மாறன் மற்றும் இளங்கோ ஆகியோர் பள்ளிக்குப் போகிறார்கள் என்று எழுதுகின்றனர். தமிழ் இலக்கண மரபு அறிந்து எழுதினால் இத்தகைய பிழைகள் நேருமா? பாமரர் பேச்சில்கூட இத்தகைய பிழைகளைக் காணமுடியாதே! அவர்களுக்குத் தெரிந்த தமிழ்மொழி மரபு, படித்தவர்களுக்குத் தெரியாமற்போனது வியப்புக்குரியதன்றோ? நல்ல தமிழறிஞர்கள் நூல்களைப் படித்தால் தமிழ் மரபு தெரியும். இத்தகைய பிழைகளும் ஒழியும். அறிஞர் அண்ணாவின் கட்டுரையிலிருந்து ஒரு பகுதியை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவருகிறேன். மரபு வழுவாத் தமிழுக்கு நல்லதோர் எடுத்துக்காட்டு இது:
பேராசிரியர் சேது(ப்பிள்ளை) அவர்கள், தமிழின் ஒலி மாட்சி குறித்து அழகுறப் பேசியிருக்கிறார். தமிழ்மொழிக்கே அணியாக விளங்கிடும் கரம் கரம் குறித்து எடுத்துக்கூறி. அளிக்கும் ஒலியின் இனிமையை எடுத்தியம்பி, இத்தகைய ஒலி மாட்சியை, பிறமொழிகள் பெற்றிராத ஒலிமாட்சியை, நந்தம் மக்கள், உணர்ந்து உவகை கொள்ளாதிருத்தல் குறித்தும், அதன் உயர்வறியாது அதனைப் பாழ்படுத்திடும் போக்கினைக் கண்டித்தும் பேசியுள்ளார்.
எழுந்திரு ஏந்திரு என்றாகிவிட்டதையும்,
திருவிழா திருவிஷா என்று கெடுவதையும்,
பழம் பளம் ஆகிப் பாழ்படுவதையும்,
கிழவி, கியவி ஆகி கரம் கேலியாக்கப்படுவதையும், எடுத்துக்காட்டி, நமது தாய்மொழிக்கே அழகளிக்கும் கரம் இங்ஙனம் பாழ்படுத்தப்படுகிறதே, கொச்சை பேசி மொழியினைக் கொலை செய்கிறார்களே என்று கூறிக் கசிந்துருகி நிற்கிறார்.
கரம் மற்றோர் அணி! இதனையும் பாழ்படுத்துகின்றனர் உரையாடலில்!
கரம், வன்மையான உணர்ச்சியைக் காட்டிடும் ஒலிக்குறி! இதனை உணராமல், வை படாதபாடுபடுத்துகிறார்களே நம்மனோர். காற்று, காத்தாகி விடுகிறது! நாற்று, நாத்தாகிறது! ஐயகோ! அம்மவோ! சிலம்பளித்த செல்வர்,
அறிவு அறைபோகிய பொறி அறுநெஞ்சத்து
இறை முறை பிழைத்தோன் வாயிலோயே!
என்று கண்ணகி கூறுவதாகச் செப்புகிறாரே, ஆறு கரம் ஒலிக்கிறது கேண்மின் என்று எடுத்துக் காட்டுகிறார்.
மற்றும் பலகூறி, பேராசிரியர் மொழிவளம் பாழ்படுவது குறித்துக் கவலைப்படுகிறார்.
கரம் கரம் பாழ்படுகிறது!
தமிழ்மொழிக்கே தனிச்சிறப்பளிக்கும் அழகணி! இதனை அறியாதிருக்கும் தமிழர் தமிழழிப்போராகின்றனர்.
அவர்தம் போக்குக் கண்டு, மொழியின் சுவையினைப் பருகிடும் பேராசிரியர், கொதித்தெழுவதும், ஆகுமோ இந்தப் போக்கு எனக் கடாவுவதும் கரத்தின் அருமையினைக் கூறுவேன் கேண்மின், என்று அறைவதும் முறையே குறை கூறுகின்றேனில்லை! அவர் ஆறு கரம் ஒலித்திடும் சிலப்பதிகார அடிகளை நினைவுபடுத்தும்போது, உண்மையிலேயே, அந்த கரங்கள், தமிழ்மொழியின் ஒலிமாட்சியையும், பத்தினிப் பெண்ணின் உள்ளத்தை ஆட்சி செய்த வீர உணர்ச்சியையும் ஒருசேர எடுத்துக்காட்டத்தான் காண்கிறோம். மறுப்பாரில்லை! அத்தகைய மாண்புமிகு மொழிக்கு நாம் உடையோம் என்றெண்ணிப் பெருமிதம் கொள்ளாமலில்லை!
மங்கை நல்லாளிடம் காணும் ஒயிலும், மயிலிடம் காணும் சாயலும், மொழியிடம் காணப்பெறும் ஒலி அழகுக்கு ஈடாகாதுதான்! அந்த ஒலி அழகு, கொச்சை பேசுவதால், செத்தொழிகிறது என்பது கண்டு கண்ணீர் வடித்திடத் தக்கதோர் நிலைதான் ஐயமில்லை! ஆனால்,!
ஒளியும் மல்கி மறைந்துகொண்டிருக்கிறது!
ஒலிகெட்டும் ஒளிமங்கியும் இருத்தல் மட்டுமல்ல, மொழியே கீழ்நிலைக்கு, தாழ்நிலைக்குத் தள்ளப்பட்டுக் கிடக்கிறது.
பாவலரும் காவலரும் போற்றி வளர்த்த மொழி, அரச அவையிலும் ஆடலரங்கிலும், புலவர் மன்றத்திலும் பூங்காவிலும், கடலின் மீதும், குன்றின் மீதும் களிறு ஏறுவோனும், காற்றை அடக்குவோனும், எங்கும் எவரும் பேசி மகிழ்ந்த மொழி, இன்று, எல்லாத் துறைகளிலும், பேராசிரியர் பெருங்கவலை கொள்வது போல, ஒலிமாட்சி இழந்து மட்டுமல்ல, நிலை இழந்து நிற்கிறதே! கேட்பார் யார்? எங்குளர்? மொழியின் வளம் பேசி மகிழ்வோர் உளர்! ஒலி அழகுகாட்டி உவகை ஊட்டுவோர் உளர்! மொழியின் நிலை? அந்நிலைக்கு வந்துள்ள கேடு, அக்கோட்டினை மூட்டிடும் கெடுமதி கொண்டோர்! அவர்தம் அடிதொட்டு ஏற்றம் பெற எண்ணும் முதுகெலும்பற்றோர்! இவை குறித்து எடுத்தியம்ப யார் உளர்?” (அறிஞர் அண்ணா).
இந்தக் கட்டுரையிலே எத்தனையோ இடங்களில் எண்ணும்மை வந்திருக்கிறது. எங்கேனும், ஓரிடத்திடத்திலாவது எண்ணும்மைக்குப் பதிலாக மற்றும் என்னும் சொல்லை அண்ணா பயன்படுத்தியிருக்கிறாரா? இல்லையே! ஏன்? அவர் தமிழறிந்தவர்; தமிழ் மரபு அறிந்தவர்; அது மட்டுமன்று; ஆங்கிலமும் தமிழ்மொழியும் நன்கறிந்தவர். நம் மொழி மரபைக் கட்டிக் காத்துத் தமிழ்மொழியை வளர்க்க வேண்டும் என்பதிலே அளவற்ற ஆர்வமும் அக்கறையும் கொண்டிருந்தவர் என்பது அனைவரும் அறிந்ததே. எனவே, அண்ணாவின் எழுத்திலே, தமிழ் மரபு பொன்னெனப் போற்றிக் காக்கப்படுகிறது. நல்லதமிழ் எழுத நமக்கு உற்ற துணையாக அமைபவை தமிழ் மரபு உணர்ந்த இத்தகைய அறிஞர் பெருமக்களின் எழுத்துகளே!
சற்று முன்பு நாம் எடுத்துக் காட்டிய காட்டுரையின் இறுதுயிலே,இவை குறித்து எடுத்தியம்ப யார் உளார்?” என்று அண்ணா கேட்கிறார். இது 1955-இலே அறிஞர் அண்ணா எழுப்பிய கேள்வி. இன்றும் அதே கேள்வியைக் கேட்க வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். இது வெட்கத்திற்கும் வேதனைக்கும் உரிய நிலையல்லவா? இதைப் போக்கித் தமிழன்னைக்கு வலிவும் வனப்பும் ஊட்டி, அவள் தலை நிமிர்ந்து நிற்கச் செய்வது நம் கடமையன்றோ?
தமிழ்மொழி, இலக்கியம், பண்பாடு போன்ற துறைகளில் பங்கம் விளைவித்து, அதன்வழி, தமிழை ஊனப்படுத்த நினைப்போர் யாராக இருந்தாலும், அவர்கள் எவ்வளவு பெரிய இடத்தில் இருந்தாலும், அவர்களின் மோசடிகளைக் கூர்மழுங்கச் செய்து, தமிழைக் காக்க நெஞ்சில் உரமும் நேர்மைத் திறமும் கொண்ட தமிழறிஞர்களும் தமிழாசிரியர்களும் முன்வர வேண்டும். அப்போதுதான் தமிழன் தன் தாய்மொழியின் சிறப்பை அறிந்து தலைநிமிர்ந்து நிற்க முடியும்.
நாம் எடுத்துக்காட்டிய கட்டுரையில் வேறோரிடத்தில் அறிஞர் அண்ணா குறிப்பிட்டிருக்கும் இன்னொரு செய்தி, இன்றைய தமிழனின் நிலைக்கும் அப்படியே பொருந்துகிறது.

படித்திருப்பாயே தம்பி, பம்பாயில் பத்து நாளைக்கு முன்பு, ஒரு புனித விழாவன்று கடல்நீர் இனிக்கிறது என்று ஒரு புரளி கட்டிவிடப்பட்டதாமே. அந்தச் செய்தியை, எவனோ ஓர் எத்தன், தனக்குக் கிடைத்த ஏமாளியிடம் கூறி  வைத்திருக்கிறான். கடல்நீர் இன்று மட்டும் இனிக்கும் என்று. அவ்வளவுதான். சாரை சாரையாக மக்கள் கடலை நோக்கிச் சென்று, நான் முந்தி நீ முந்தி என்று விழுந்தடித்துக்கொண்டு சென்று, கடல்நீர் பருகினராம்.
கடல்நீர் கரித்தது! முகம் சுளித்தது! குமட்டலும் வந்தது! எனினும் என் செய்வர்! கடல்நீர் இனிக்கும் என்றல்லவா கூறி இருக்கிறார்கள். எனவே, கடல்நீர் கரிக்கிறது, இனிக்கவில்லை என்று கூறினால், பாபாத்மாவுக்கு அப்படித்தான்! புண்யாத்துமாவுக்குத்தான் இனிக்கும் என்று கூறிவிடுவரே என்று எண்ணி, ஏதும் கூறாமலே இருந்துவிட்டனர் பெரும்பாலோர். துணிந்து சிலர் கூறினர், கடல்நீர் எப்போதும் போல கரிக்கத்தான் செய்கிறது; இனிக்கும் என்று சொன்னது வெறும் புரளி என்று! ஆம்! – என்றுகூடப் பக்தர்கள் கூறவில்லையாம் முகம் ஆம் என்றதாம்!” (தம்பிக்குக் கடிதம்)

கடல்நீர் இனிக்கிறது என்பதை மறுத்துக் கூற இயலாமல், பரிதவிக்கிறவர்கள் பலர். “கடல்நீர் இனிக்கவில்லை கரிக்கிறதுஎன்று துணிந்து கூறியவர்கள் சிலர். தமிழ்மொழியைப் பொறுத்தவரையில் இன்றும் அதே நிலைதான். நடுநிலை நின்று உண்மையைக் காணும் ஆற்றலும் உணர்ந்த உண்மையை எடுத்தியம்பும் துணிவும் நமக்கு வரவேண்டும். அத்தகைய துணிவுடையோர் சிலராக இருப்பதால் பயனில்லை; அவர்கள் பலராக வேண்டும்! அப்போதுதான தமிழின் நிலைஉயரும்! தமிழனின் நிலையும்உயரும்!




*இக்கட்டுரையாசிரியர் தாம் எழுதிய இனிய தமிழில் இனிக்கும் தமிழ் இலக்கணம் என்னும் நூலுக்காக, மொழிப்புலத்திற்குரிய தமிழக அரசின் முதல்பரிசு (2005), அனந்தாச்சாரி அறக்கட்டளை விருது (2006) ஆகியவற்றைப் பெற்றவர் என்பது பெருமைக்குரிய செய்தியாகும்.

1 comment:

  1. அருமையான கட்டுரையினை இங்குப் பதிவு செய்தமைக்கு என் பாராட்டுகள். மொழியின் வளர்ச்சிநிலை என்று கூறி மரபைப் பாழ்படுத்தும் செயலில் 'மொழி மேதைகள்' சிலர் இறங்கியுள்ளனர். நல்ல தமிழ் பயின்றோர் இதை ஒருநாளும் ஒப்பமாட்டார். அத்தகையோரை ஆசிரியர் கடிந்துகொள்வதில் தவறில்லை.

    ReplyDelete