இளையர் வனம்



நீ பயணம் செய்த விமானத்தில் கோளாறு ஏற்பட்டு அது  ஒரு பாலைவனத்தில் தடுமாறித் தரை இறங்குகிறது. அவ்விபத்தில் நீயும் அதில் பயணம்  ெசய்தவர்களும் பாதிக்கப்படுகிறீர்கள். அந்த விபத்தை  விளக்கி 200 சொற்களில் எழுதவும்.

உதவி வரும் தேரத்தில் !...
நாள் 1:  
_ _ _ !
நாள் 2:
புகை மூட்டம் சற்றுக் கலைந்தது. நானும் உயிர் தப்பிய சிலரும் சுதாகரித்துக் கொண்ட பின், இங்கும் அங்கும் பார்க்கிறோம். பலர் காயம்பட்ட நிலையில் விழுந்து கிடக்கின்றனர். சிலர் இறந்து கிடக்கின்றனர். நாங்கள் இறந்தவர்களை அடக்கம் ெசய்கிறோம்; காயம் அடைந்தவர்களுக்கு உதவி செய்கிறோம்.
நாள் 3:
உணவும் தண்ணீரும் எங்கும் தென்படவில்லை. வெயில் மட்டும் அதிகரித்துக் கொண்டே போகிறது. இன்று ேமலும் சில பேர் மடிகின்றனர். என் காலில் பட்ட காயம் மேலும் மோசமாகிறது.
நாள் 4:
இன்று எனக்கு ஒரு புதிய நண்பன் கிடைத்தான். அவன் பெயர் பீட்டர். அவனுக்குப் பத்து வயது. அவன் தன் குடும்பத்தினர் அனைவரையும் இந்த விமான விபத்தில் இழந்துவிட்டான். அவனுக்கு உடலில் பல காயங்கள். இருந்த போதிலும் துயரம் எல்லாம் நீங்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறான். நான் அவனைப் பார்த்து வியக்கிறேன்.
நாள் 5:
இன்று நாங்கள் சிறிய பாலைவன விலங்குகளைப் பின் தொடர்ந்து செல்கிறோம். அவை ஒரு சிறிய குளத்தை நோக்கிச் செல்கின்றன. குளத்தில் சிறிய அளவுதான் தண்ணீர் இருக்கிறது. சிறிது நேரத்தில் அது காய்ந்துவிடும். நாங்கள் தாகம் தீரத் தண்ணீரைக் குடிக்கிறோம். பின்பு, கொண்டு வந்திருந்த பாத்திரங்களில் தண்ணீரை நிரப்பி மற்றவர்களுக்குக் கொண்டு செல்கிறோம். தண்ணீர் கிடைத்தாலும் உணவு உண்ண வாய்ப்பில்லை. பசி என்னை வாட்டுகிறது. என் புண்ணும் மேலும் மோசமடைகிறது.
நாள் 7:
இன்று  சில ஒட்டகங்கள் எங்களை நோக்கி வருகின்றன. நாங்கள் எல்லோரும் சேர்ந்து ஓர் ஒட்டகத்தை தாக்கிக் கொல்கிறோம். வேறு வழியின்றி ஒட்டகத்தின் மாமிசத்தைச் சாப்பிடுகிறோம். இதற்கிடையில் அங்கிருந்த ஒருவர் பயந்து போன மற்றொரு ஒட்டகத்தின்மேல் ஏறிச் செல்கிறார். அவர் உதவி நாடிச் செல்கிறார்.
நாள் 9:
இரண்டு நாட்கள் கழிந்துவிட்டன. ஒட்டகத்தில் சென்றவர் திரும்பி வரவே இல்லை. பீடடர் என் கண் முன்னால் இறக்கிறான். எனக்கு ஆழக்கூடத் தெம்பில்லை.
நாள் 11:
பதினொரு நாட்கள் ஆகிவிட்டன. தொலைவில் ஏதோ ஒரு சிறிய விமானம் வருவதுபோல் ஒலி கேட்கிறது. ஆனால், என் உடம்பில் ஒரு துளி சத்துகூடக் கிடையாது. நான் அப்படியே மணலில் சாய்கிறேன். கொஞ்சம் கொஞ்சமாகக் கண் இருட்டிக் கொண்டு வருகிறது. என் மூச்சு....


          
- R வர்ஷா, G1  வயது 14.






 








நமது நாட்டிற்கு  வெளிநாட்டுத்திறனாளர்கள்  தேவையா?







'கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது ' என்பதற்கு நமது சிங்காரச் சிங்கையே எடுத்துக்காட்டு. ஏனென்றால் இயற்கை வளங்கள் எதுவும் இல்லாமல் மனிதவளத்தை வைத்தே நொடிக்கு நொடிப் பற்பல வளர்ச்சிகளையும், மாற்றங்களையும் கண்டு வருகின்றது. இத்தகைய அபார வளர்ச்சிக்கு ஏணியாகவும் தோணியாகவும் இருப்பவர்கள்  வெளிநாட்டுத் திறனாளர்கள் என்று கூறினால் சிலர் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றார்கள். ஆனால், அதிலும் நியாயம் இருக்கின்றது. சிலர் வெளிநாட்டுத் திறனாளர்கள் வேண்டும் என்று அவர்களுக்குச் சிகப்புக்கம்பளம் விரிக்கின்றார்கள். இதிலும் நியாயம் இருக்கின்றது. இந்த விவாதத்தை நாம் சற்று ஆராய்வோம்.

நமது நாட்டிற்கு வெளிநாட்டுத்திறனாளர்கள் மூலமாக இரண்டு விதமான முதலீடுகள் வருகின்றன. ஒன்று அறிவாற்றல் முதலீடு, மற்றொன்று பணமுதலீடு. சிங்கப்பூரின் பொருளியலை வளர்ப்பதிலும் உயர்த்துவதிலும் இவர்கள் பெரும்பங்காற்றுகின்றனர். இவர்களுக்குத் தோள் கொடுப்பவர்கள் வெளிநாட்டு உடல்திறனாளர்கள். இவர்கள் கட்டுமானப் பணியாளர்களாகவும், வீடுகளில் உழைக்கும் பணிப்பெண்களாவும் காட்சியளிக்கின்றார்கள். சிங்கப்பூரர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துபவர்கள் இந்த உடல்திறன் ஊழியர்கள்கள்தான் என்று மார் தட்டிச்சொல்லலாம். ஏனென்றால், இன்றைய சொகுசான வாழ்க்கை வாழும் சிங்கப்பூரர்களால் செய்ய முடியாத பணிகளைத்தான் உடல் திறன் ஊழியர்கள் செய்கின்றாரகள். நமது சிங்கப்பூர்த் தம்பதிகளும், பெற்றோர்களும் தங்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ளப் பணிக்குச் செல்வதால் அவர்களுக்குப் பணிப்பெண்கள் உதவிக்கரம் நீட்டுகின்றார்கள். நமது சிங்கப்பூரர்கள் பொருளீட்ட வசதியான தொழில் வாய்ப்புகளை அளிப்பவர்களில் பெரும்பாலோர் வெளிநாட்டு முதலீட்டாளர்களே! அவர்களை, அந்தப் பணமுதலாளிகளை வரக்கூடாது என்று நாம் கதவை மூடினால் என்னவாகும் என்பதை நாம் கொஞ்சம் கண்ணை மூடிக் கற்பனை செய்து பார்க்கவேண்டும். அறிவாற்றல் முதலீடு செய்பவர்கள் அவர்கள் நாட்டு மக்களின் வரிப்பணத்தில் படித்துப் பெற்ற அறிவை இங்கு வந்து செலவிடுகின்றார்கள். ஆதலால், இந்த இரு முதலீட்டாளர்களும் இன்று சிங்கப்பூரின் கண்கள் போன்றவர்கள்.
 இது அப்படியே இருக்கட்டும், இதனைச்சற்றுப் பார்ப்போம்.  நம் நாடு இன்று எதிர்நோக்கும் சவால்கள் யாவை ? இதனை ஆராய்வோம்.
நமது அரசாங்கம் எவ்வளவு தான் ஆசை வார்த்தைக் கூறினாலும் இன்றைய இளையோருக்குத் திருமணம் என்பதும் குழந்தை பெறுவது என்பதும் வேப்பங்காயாகச் கசக்கின்றது. இதனால், குழந்தைப் பிறப்பு விகிதம் மண்ணைத் தொடுகின்றது. ஆனால், மூப்பு அடைந்து வரும் சிங்கப்பூரர்கள் எண்ணிக்கையோ விண்ணைத் தொடுகின்றது. இதில் திருமணமான தம்பதிகளின் விவாகரத்துக் கூத்துகளும் எல்லை மீறிப்போகின்றது.

இவ்வாறாக நாட்டில் இருக்கும் ஒரே மக்கள் வளம் குறைந்து வந்தால், மனிதவளத்தை மட்டுமே நம்பி உள்ள நம் நாட்டின் கதி அதோ கதி தானே !
இவ்வாறு உள்நாட்டு மனித வளம் குறைவாக இருக்கும் நம் நாட்டிற்கு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வரமாட்டார்கள். பிறகு, நம் மக்கள் எங்கு சென்று வேலை தேடுவது அல்லது செய்வது? நம் நாட்டில் தற்போது இருக்கும் முதலீட்டாளர்களும் மூட்டைக்கட்டிவிடுவார்கள். பிறகு, நமது பொருளியலும் ஆட்டங்கண்டுவிடும். இதனால், நமது சொகுசு வாழ்க்கையும் நிலைக்குலைந்துவிடும்.

தற்போது நம் நாட்டில் இருக்கும் இளையோர் அனைவரும் பட்டதாரிகளாக இருக்க வேண்டும் என்ற கொள்கையை அரசாங்கம் வலியுறுத்துகின்றது. இந்த நல்ல காரியம் நடந்தால் எதிர்காலத்தில் அனைவருக்கும் வேலைவாய்ப்பும், கைநிறையக் காசும் கிடைக்க வேண்டும். அதற்கு மேலும் பல வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க வேண்டும். உடனே சிலர், '' நம் அரசாங்கமே வேலை வாய்ப்புகளை உருவாக்கலாமே?'' என்பர். இன்று இயற்கை வளங்கள் உள்ள நாடுகளே வெளிநாட்டு முதலீடுகளைக் சிகப்புக்கம்பளம் விரித்து வரவேற்கும்போது, ஒன்றுமில்லாத நாம் அதை விட வீரியமாக விரைவாகச் செயல்பட்டு வரவேற்க வேண்டும். இதனைப்  பொருளாதாரம் தெரிந்தவர்கள் உணர்வார்கள், அறிவார்கள். அதாவது நமது கையிருப்புப்பணத்தை எடுத்து அரசாங்கம் கட்டடங்களிலோ, தொழில்துறையிலோ முதலீடு செய்துவிட்டால் கையிருப்புக்குறைந்து விடும். இதனால், உலக நிதி நிறுவனம் நமது நாணயத்தின் மதிப்பை உயர அனுமதிக்காது. நாணய மதிப்புக் குறைந்து விட்டால் சிங்கப்பூரர்களின் சொத்தின் மதிப்புக்குறைந்து விடும். பிறகு, உள்நாட்டுக் குழப்பங்கள் தலைத்தூக்கும்.

 ‘'வெளிநாட்டுத்திறனார்களால் சிங்கை மக்களின் வாய்ப்புகள் பறிக்கப்படுகின்றன ‘' என்கின்றனர் சிலர். இதனை ஒரளவு ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். வெளிநாட்டுத்திறனாளர்கள் இன்று தம்பதிகளாகவும், குழந்தைகளோடும் வருகின்றனர். அதிலும் பல வீடுகளில் கணவன், மனைவி இருவரும் வேலை பார்த்து நவீன வசதிகளோடு வாழ விரும்புவதால் கிடைத்த ஊதியத்திற்கு வேலை செய்கின்றனர். இதனால் பெரும் பொருள் செலவு செய்து கல்வி கற்ற நம் சிங்கப்பூர்களுக்கு அதற்கு ஏற்ற ஊதியம் கிடைக்காத நிலையை உருவாக்கி விட்டனர் இங்கு வந்துள்ள வெளிநாட்டுத் திறனாளர்கள். மேலும் நன்கு படித்த வெளிநாட்டுத் திறனாளர்களின் குழந்தைகள் மரபீயல் ரீதியாகவும், குடும்பச்சூழலின் காரணமாகவும் நன்கு படித்து நம் நாட்டு மாணவர்களுக்குப் போட்டியாக அமைந்து மன உளைச்சல் கொடுகின்றனர். நம் இளையோர் தேசிய சேவை முடித்து விட்டு, பிறகு, பட்டம் பெறப் பல்கலைக்கழகம் சென்றால் அங்கும் வெளிநாட்டு மாணவர்களுக்குத் தான் கொண்டாட்டம், நம் மாணவர்களுக்குத் தான் திண்டாட்டம்!

ஆகவே, வெளிநாட்டினர் வருகையால் போட்டித்தன்மை உருவாகியுள்ளது என்பது உண்மையே! ஆனால் அனைத்து நிலைகளிலும் நமது நாடு சிங்கப்பூரர்களுக்குத்தான் முன்னுரிமை வழங்குகின்றது. திடீரென்று பொருளியில் வீழ்ச்சி ஏற்பட்டு ஊழியர்கள் வேலை இழக்க நேரிட்டால் முதலில் வேலையிலிருந்து நீக்கப்படுவது வெளிநாட்டினர்தான். ஆகவே, வேலை இழப்புப் போரில் சிங்கப்பூரர்களின் வேலை பாதுகாப்புக் கவசமாக வெளிநாட்டினர் இருந்து நம் சிங்கப்பூரர்களின் வேலையைப் பாதுகாக்கின்றார்கள் என்றால்  அது மிகையாகாது.
மேலும் வெளிநாட்டினர் வருகையால்  வீட்டு விலை ஏறிவிட்டது என்கிறார்கள். அதனையும் சீர்த்தூக்கிப் பார்க்க வேண்டும். வெளிநாட்டினர் நேரடியாக வீடமைப்பு வளர்ச்சிக்கழக  வீடுகளை வாங்க முடியாது. ஆதலால், வீட்டை நம் சிங்கப்பூரர்களிடம் இருந்து வாங்குவதால் சிங்கப்பூரர்களுக்குத் தான் லாபம். சில சிங்கப்பூரர்கள் தங்களது வீட்டின் ஒரு பகுதியை வெளிநாட்டினருக்கு வாடகைக்கு விட்டும் பொருள் ஈட்டுகின்றனர். இவ்வாறு வெளிநாட்டினர் பலர் நம் சிங்கப்பூரர்களுக்குப் பணம் காய்க்கும் மரமாகத் தான் விளங்குகின்றார்கள்.

ஆனால், ஆக்கத்திற்குப் பயன்படும் ஒரு கத்தி எவ்வாறு அழிவிற்குப் பயன்படுகின்றதோ அதுபோல வெளிநாட்டினரால் நம் நாட்டிற்குப் பல இடையூறுகளும் ஏற்படுகின்றன. வன்செயல், கண்ட இடங்களில் எச்சில் துப்புவது, குப்பை போடுவது, விபச்சாரம் போன்ற சட்ட ஒழுங்குப்பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. பொருள் ஈட்டுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு இருக்கும் வெளிநாட்டினர் இங்கு பொருளியில் வீழ்ச்சி ஏற்பட்டால் பறந்துவிடுவர். ‘'அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவை போல்''. மேலும் வெளிநாட்டுத்திறனாளர்களோ அல்லது அவர்களது வாரிசுகளோ தேசியசேவையிலும் ஈடுபடமாட்டார்கள். ஆதலால் வெளிநாட்டினரை நம்பி நம் நாடு இருந்தால் அது ‘மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கின கதை' போல் ஆகிவிடும்.

ஆதலால், சிங்கப்பூரர்களாகிய நாம்  சொந்தக்காலில் நிற்கும் நிலைக்கு உருவாகுவோம். குடும்பத்தைப்பெருக்குவோம், கல்வித்திறன் மிக்க மக்களாக வளர்வோம். இவை நிறைவேறும்வரை  பொருளாதார வளத்தோடு நவீன வசதிகளோடு வாழ்வதற்காக வெளிநாட்டு ஊன்றுகோலைப் பயன்படுத்துவோம்.மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமும் உண்டு; குணமும் உண்டு. மணமும் குணமும் எங்கிருந்து வந்தாலும் ஏற்றுக்கொள்வது வல்லார் பண்பு. இன்று அமெரிக்க, ஐரோப்பியநாடுகள் வெளிநாட்டிரை வைத்தை வளர்கின்றன. ஆகவே, ஒரு நாடு வளர்ச்சி அடைய எது கிடைத்தாலும் அதனை நலமாகப்பயன்படுத்தி வளமாக வாழ்வதுதான் இக்காலத்திற்கு ஏற்றது. ஊரோடு ஒத்த வாழ வெளிநாட்டினரோடும் ஒத்துவாழ்வோம். உயர்வோம்


                          முற்றும்


செல்வி நாச்சமை

விக்டோரியா தொடக்கக் கல்லூரி(2012)




&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&




ஒரு வழிதான் இருக்கிறது!..




கொஞ்ச நாட்களாக மாலா அமைதியாக இல்லை. எதையோ பறிகொடுத்தவள்போல் வீட்டில் அமர்ந்திருந்தாள். அதை அவளுடைய அம்மா யமுனா கவனித்தாள். மாலாவிடம் கேட்டபோது ஒன்றுமில்லை என்று சொல்லி மழுப்பிவிட்டாள். உண்மையில் மாலா தன் அம்மாவிடம் பொய் சொன்னாள். பொய் சொல்லக் கூடாது என்று  அவளுக்குத் தெரியும். ஆனால்!.....

‘என்னுடைய நெருங்கிய தோழி  போதைப்  பொருள் உட்கொள்கிறாள் என்று அம்மாவிடம் எப்படிக் கூறுவது? மேலும் நானும் போதைப் பொருள் உட்கொண்டதை அம்மாவிடம் சொன்னால், அம்மா என்ன சொல்லுவார்? அவர் தாங்கிக் கொள்வாரா? இல்லை. இது அம்மாவுக்குத் தெரியக் கூடாது’ என்று முடிவு செய்தாள். காலப்போக்கில்  இந்தப் பழக்கத்தை எப்படி விடுவது? என்று யோசித்தாள். ‘இந்தப் பழக்கத்தை அவ்வளவு சுலமாக விட முடியாது. அது நடக்காவிட்டால் நான் குடும்பத்தில் இருக்க மாட்டேனே! ஏன்? ஏன்?..’

அன்று மட்டும் அவள் அவ்வழியாகப் போகாதிருந்தால்!..

அப்போதுதான் மாலா துணைப்பாட நடவடிக்கை முடித்துவிட்டுத் தன் வீட்டுக்குப் போய்க் கொண்டிருந்தாள். அவள் மிகவும் சோர்வாக இருந்தாள். அதனால், அவள் யாரும் அதிகம் பயன்படுத்தாத ஒரு குறுக்கு வழியின் மூலமாக  வீட்டுக்குச் செல்ல  முடிவு செய்தாள். அவள் நடந்து கொண்டிருக்கும்போது சில குரல்களைக் கேட்டாள். 

“ஆகா, முகர்ந்து பார். மிகவும் நன்றாக இருக்கிறது! ”
“ அப்படியா? எனக்கும் கொடு..”
“ ம்ம்... தூக்குதே!”

‘யாராக இருக்கும்?...’

ஐயத்துடன் மாலா திரும்பிப் பார்த்தாள். அவளுக்கு கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை.  அவளுடைய நெருங்கிய தோழி கலாவும் மற்ற சில பெண்களும் போதைப் பொருள் உட்கொண்டிருந்தார்கள். மாலா பயந்து போனாள். அவள் அங்கிருந்து ஓட ஆரம்பித்தபோது கலா அவளைப் பார்த்துவிட்டாள்.

“ஏய் மாலா இங்கே வா. இதை அனுபவித்துப் பார். மிகவும் நன்றாக இருக்கிறது!..” கலா கூப்பிட்டாள்.

“இ..இ.. இல்லை. வே.. வேண்டாம்!..”  மாலா தட்டுத் தடுமாறிக் கூறினாள்.

“சும்மா, வா. பயப்படாதே....” என்று சொல்லிக் கொண்டே ஒரு சிறு பையில் இருந்த போதைப் பொருளைக் காட்டினாள்.

வேண்டாம் என்று மறுப்பதற்குள் மாலாவின் வாயில் வெள்ளைத் தூளைப் பலவந்தமாகக் கொட்டினாள் கலா. அதைத் துப்பி விடாமல் இருக்கக் கலா, மாலாவின் வாயை மூடினாள். மாலா அதை உட்கொண்டபோது அவள் கண்கள் பெரிதாயின.

“ஆஹா!  ரொம்ப ஜாலியா இருக்கு!..” மாலா உளறினாள்.

கலா தன் நண்பர்களுக்கு அவளை அறிமுகம்  செய்து வைத்தாள்.

அன்றிலிருந்து மாலாவும் பள்ளி முடிந்து  தினமும்  அந்தப் பெண்களோடு சேர்ந்து போதைப் பொருள் உன்கொள்ள ஆரம்பித்தாள்.  ஏன் தாமதாக வீட்டிற்கு வருகிறாய் என்று அவளுடைய அம்மா கேட்கும் போதெல்லாம்  துணைப்பாட வகுப்பு இருந்தது என்பாள்.

ஒரு நாள் அவருடைய வகுப்பாசிரியர்,  “தலைமையாசிரியர் உன்னைப் பார்க்க விரும்புகிறார். போய்ப் பார்!..” என்று கூறினார். மாலா அச்சத்துடனும் தயக்கத்துடனும் தலைமையாரியர்  அலுவலகத்துக்குப்  போனாள்.

அங்கே!..

அவளுடைய அம்மா ஒரு புகைப்படத்தைக் கையில் வைத்துக் கொண்டு அழுது கொண்டிருந்தார். மாலா அப்புகைப்படத்தைப் பார்த்தபோது அதிர்ச்சியடைந்தாள். அப்புகைப்படத்தில் மாலா தன் தோழிகளோடு போதைப் பொருள் உட்கொள்ளும் காட்சி தெளிவாக இருந்தது.

மாலா அழுதுகொண்டே அங்கிருந்து ஓடினாள். அவளுடைய அம்மா “மாலா நில்!..” என்று பின்னாலிருந்து கத்தியதை அவள் பொருட்படுத்தவில்லை.

‘இது அம்மாவுக்கு எப்படித் தெரிய வந்தது? எப்படித் தெரிய வந்தது?..’ அந்தக் கேவ்வியே மீண்டும் மீண்டும் அவள் மனத்தில் ஒலித்துக் கொண்டிருந்தது.

‘அதைச் சரி செய்ய ஒரு வழிதான் இருக்கிறது..’ 

மாலா, பக்கத்தில் இருந்த ஓர் அடுக்குமாடி வீட்டின் எட்டாவது மாடிக்குச் சென்றாள். கீழே பார்த்தாள். அவள் தலை சுற்றியது. அவள்  ஒரு நீண்ட பெருமூச்சு விட்டாள். தன் புத்தகப் பையைத் தூக்கிக் கீழே எறிந்தாள்.



                             


சிவானுஜா, வயது13,  R4 (2012)
சிங்கப்பூர்க் கலைப் பள்ளி



முற்றும்





No comments:

Post a Comment