ஊர்வலம்



வரையாது வழங்கும் வள்ளல் ஜலீலுக்கு ஜாஸா பக்தி விருது


வானத்திலிருந்து பொழிந்து இவ்வையகத்தைச் செழிக்க வைக்கிறது  மழை. அதனைத்தான் இந்தப் பரந்து விரிந்த அண்டத்தின் ஈடியிணையற்ற வள்ளலாகக் கொள்ள வேண்டும். அதனால்தான் உலகப் பொதுமறையாம் திருக்குறளை அதிகார வகைப்படுத்தியோர் வான்சிறப்பைக் கடவுள் வாழ்த்துக்கு அடுத்தபடியாக வைத்துப் பெருமைபடுத்தினர்.

       வான்நின்று உலகம் வழங்கி வருதலால்                                
                  தான் அமிழ்தம் என்றுணரப் பாற்று   என்றும்

                 தானம் தவம்இரண்டும் தங்கா வியன் உலகம்
        வானம் வழங்கா தெனின்

என்றும் இன்னும் பலவாறும் திருவள்ளுவர் பெருமான் வான்சிறப்பினைப் போற்றிப் புகழ்கிறார்.

மழையினைப்போல் பலன் கருதாது இவ்வலகில் ஒடுங்கியும் முடங்கியும் வசதியற்று வாழும்  மக்களுக்குத் தம் உடலைக் கொடுத்தும் உறுபொருளை வழங்கியும் உய்வித்து வருவோர் பலர் இருக்கிறார்கள். வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என்று உருகிய இராமலிங்கனாரின் கருணையுள்ளத்தைப் பெற்றுக் கொண்டவர்கள் அவர்கள். நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை என்ற உயர்ந்த நிலையில் வைக்கப்பட்டோர் அவர்கள்.

   அத்தகைய ஈரநெஞ்சம் படைத்தவர்கள் பாராட்டப்பட்டுச் சிறப்பிக்கப்படுவது சிங்கையில் சிறந்த வழக்கமாக இருந்து வருகிறது.
பிறர்மேல் அன்பும் அவர் நலனில் அக்றையும்கொண்ட அருளுள்ளம் கொண்டோர் ஐவர் அண்மையில் சிறப்பிக்கப்பட்டனர்.

கடந்த ஜூன் திங்கள் 22ஆம் நாள், பிற்பகல் 2.00 மணியளவில் இண்டர் கொண்டினண்டல் ஹோட்டலில் சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம்  ஜாஸா பக்தி விருது 2013 (Jasa Bakti Award 2013)  வழங்கும் நிகழ்ச்சியை நடத்தியது. அந்நிகழ்ச்சியில் சிங்கப்பூர் அதிபர் மாண்புமிகு டோனி டான் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு விருதளித்துச் சிறப்பித்தார்கள். அம்மன்றம் ஆண்டுதோறும் நடத்தும் நிகழ்ச்சியாகும் அது.
சிங்கப்பூரில் வாழும் முஸ்லீம் சிங்கப்பூரர்களுள் சமூகச் சேவையாற்றுவதில்  தனித்தன்மையுடன் சிறந்து விளங்குவோருக்கு ஜாஸா பக்தி விருதுவழங்குதல் வழமையில் இருந்து வருகிறது. தேர்ந்தெடுக்கப்படுவோர் கல்வி, கலை, சமூகப் பணிகள் போன்ற துறைகளில் சேவை புரிந்திருக்க வேண்டும். அதே வேளையில் பள்ளிவாசல், இஸ்லாமிய சமூக அமைப்புக்கள் போன்றவற்றுக்குக் குறிப்பிட்டுச் சொல்லுமளவிற்குத் தொண்டு புரிந்திருக்க வேண்டும். அத்தகையோரே விருதுக்குத் தகுதி பெறுவர்.

இவ்வாண்டு ஜாஸா பக்தி விருது பக்தி விருது பெற்ற ஐவருள் நமது நெஞ்சுக்கு மிகவும் நெருங்கியவர் ஜலீல் என்று நம் அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் ஹாஜி எஸ் எம் அப்துல் ஜலீல் (Haji S M Abdul Jaleel) அவர்களாகும். ஜலீல் அவர்கள் மெச்சத் தகுந்த அந்தச் சிறப்பு விருதைச் சிங்கையதிபர் டாக்டர் டோனி டானிடமிருந்து பெற்றுக் கொண்டார். அது அவருக்கு மட்டுமன்று சிங்கப்பூர்த் தமிழர் அனைவருக்கும் பெருமை சேர்க்கும் ஒன்றாக அமைந்தது எனில், அது மிகையன்று.

விருதுக்குரியோருக்கான வரையரைகளாகக் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்துத் துறைகளிலும் ஜலீல் அவர்கள்  மேம்பட்ட சேவை புரிந்துள்ளார். அந்த வரையறைகளுள் அவர் தமிழ் இலக்கியத் துறைக்கு ஆற்றியுள்ள பணிகள் அளப்பரியன என்பது எனது கருத்தாகும்.
சிங்கப்பூரில் தமிழ் எழுத்தாளர் ஒருவர், நூல் வெளியிட நிதி தேவைப்படுகிறது என்று உதவி நாடி நின்றால், அன்றலர்ந்த தாமரைபோல் முறுவல் மாறாத முகத்துடன் முன்வந்து உதவி புரிபவர் ஜலீல். பணம் பலரிடம் இருக்கலாம். அதைப் பிறருக்குக் கொடுக்கும் மனம் இருக்க வேண்டும். இல்லை என்போர் இருக்கையிலே இருப்பவர்கள் இல்லை என்பார் என்று இரக்கக் குணமற்ற செல்வந்தர்களை எண்ணி மனம் குமுறுகிறார் அண்மையில் நம்மைவிட்டு மறைந்த கவிஞர் வாலி. அவர் வருத்தத்துக்கு மாறான குணம் கொண்டவர் ஜலீல். நிதியுதவி நாடிச் சென்றவர்க்கு அவர் இல்லை என்ற சொன்னதாகத் தகவல் இல்லை. அதனால்தான் அவர் சிங்கைச் சீதக்காதிஎன்று சிறப்பிக்கப்படுகிறார்.
இது எப்படி இயலுகிறது என்று அவரிடம் ஒரு முறை கேட்டபோது, நான் வரும்போது எதுவும் கொண்டு வரவில்லை. போகும்போதும் எதுவும் உடன் எடுத்துப் போகப் போவதில்லை. இறைவன் கொடுத்த நற்பேறு நான் பெற்றிருக்கும் செல்வம். அதனை மற்றவர்களுக்குக் கொடுப்பதில் நான் பேரின்பம் அடைகிறேன்,” என்று சொன்னார். எவ்வளவு பொருள் பொதிந்த வார்த்தைகள்!

உலகத்தில் உள்ள எல்லா மதங்களும் சமயப் பெரியார்கள் எல்லாரும் கூறும் மந்திர மொழிகள் அவை. அதனைப் பின்பற்றும் மனிதராக அவர் விளங்குகிறார். அது எளிதான செயலன்று.

        மனிதன் என்பவன்   
        தெய்வமாகலாம்                               
        வாரி வாரி வழங்கும்போது வள்ளலாகலாம்
        வாழைபோலத் தன்னைத் தந்து தியாகியாகலாம்
        உருகி ஓடும் மெழுகைப் போல ஒளியை வீசலாம்

என்ற கவியரசு கண்ணதாசனின் வைரவரிகளுக்கு எனக்குத் தெரிந்த எடுத்துக் காட்டு ஜலீல்தான்.

அவர் இன்னும் பல விருதுகள் பெற்று இன்புற்றிருக்க தமிழ்ச் சமூகத்தின் வாழ்த்துக்கள் உரித்தாகுக!

2 comments:

  1. அன்புள்ள ஐயா,
    உங்கள் வலைப்பதிவு மிகவும் அருமை, இந்த வலைப்பதிவு தோட்டம் தூய அழகிய தமிழ் பூச்செடிகளால் நிரம்பி இருக்கிறது
    மனமார்ந்த வாழத்துக்கள்
    முத்து

    ReplyDelete
  2. வாழ்த்துக்கு நன்றி. தொடர்ந்து படியுங்கள் முத்து.

    ReplyDelete