சிங்கப்பூரில்
எதிர்வரும் வெள்ளிக்கிழமை 06.09.2013ஆம் நாள் ஆசிரியர் தினம். ஆசிரியர்களுக்கும்
மாணவர்களுக்கும் விடுமுறை நாள். ஆசிரியர்களின் அர்ப்ணிப்புத் தன்மையையும்
அறிவார்ந்த வழிகாட்டுதலையும் உளமார்ந்த ஈடுபாட்டையும் போற்றிப் பாராட்டும் வண்ணம் ஆசிரியர்
தினம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் ஆசியர்களுக்கும்
மாணவர்களுக்கும் கல்வித்துறை சார்ந்தோருக்கும் விடுமுறை நாளாக ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டுவரை, சிங்கப்பூரில் செப்டம்பர்த் திங்கள் 1ஆம் தேதிதான்
ஆசிரியர் தினமாக அனுசரிக்கப்பட்டு வந்தது. இவ்வாண்டு ஐந்து நாட்கள் தள்ளி ஆசிரியர்
தினம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவும் ஒரு வகையில் நல்ல ஏற்பாடு என்றுதான்
கூறவேண்டும். செப்டம்பர்த் திங்கள் 6ஆம் தேதியிலிருந்து ஒரு வாரம் மூன்றாம் தவணைப் பள்ளி விடுறை தொடங்குவதால்
தொடர்ந்தாற்போல் ஓய்வு பெறுவதற்கு மாணவர்களுக்கு இந்த ஏற்பாடு ஏதுவாக அமையலாம்.
உலக நாடுகள்
எங்கும் ஆசிரியர் தினம் ஒரே நாளில் கொண்டாடப்படுவதில்லை. ‘யுனெஸ்கோ‘ போன்ற நிறுவனங்களின் பரிந்துரையின்பேரில் ‘உலக ஆசிரியர்
தினம்’ ஆக்டோபர்த் திங்கள் 5ஆம் நாள் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே நாளை இங்கிலாந்தும்
ஆசிரியர் தினமாக அறிவித்துள்ளது. ஏனைய உலக நாடுகள் யாவும் அந்தந்த நாடுகளின்
வசதிக்கேற்ப ஆசிரியர் தினத்தைக் கொண்டாடி வருகின்றன என்பது பலரும் அறியாத
செய்தியாக இருக்கலாம்.
நம் அண்டை நாடான மலேசியாவில் மே 16ஆம் நாளும், இந்தோனேசியாவில் நவம்பர் 25ஆம் நாளும் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.
அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் அக்டோபர்த் திங்களின் கடைசி வெள்ளிக்கிழமையும், சீனாவில் செப்டம்பர் 10ஆம் நாளும் இந்தியாவில் செப்டம்பர் 5ஆம் நாளும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன. அதுமட்டுமன்றி, உலகில் உள்ள
ஏறக்குறைய 19 நாடுகள் உலக ஆசிரியர் தினமான அக்டோபர்த் திங்கள் 5ஆம் நாளும்
சுமார் 11 நாடுகள் பிப்ரவரித் திங்கள் 28ஆம் நாளிலும் ஆசிரியர் தினத்தைக் கொண்டாடுகின்றன. (நன்றி: விக்விபீடியா இணையத்தளம்)
இத்தகவல்கள்
யாவும் ஆசிரியர்களின் பெருமைக்குக் கட்டியம் கூறுவனவாக அமைந்துள்ளன. இந்தச்
சிறப்பும் இன்னும் மேலான சிறப்புக்கள் எவ்வளவு உண்டோ அத்துணைச் சிறப்புக்களும்
ஆசிரியர்களுக்குப் பொருந்தும். அத்தகைய மகத்தான பணியில் ஈடுபட்டுள்ளோர் அவர்கள். நாட்டை
வழிநடத்தும் அரசியல் தலைவர்களையும் தம் அறிவொளியால் அகிலத்தை ஒளிரச் செய்யும் அறிவியல் அறிஞர்களையும்
இன்னும் கலைஞர்கள், காவலர்கள், பொறியாளர்கள், பொறுப்புமிக்க
மேலாண்மை அதிகாரிகள், மருத்துவர்கள், மனோவியல்
நிபுணர்கள், வணிக முனைவர்கள், சொத்து முகவர்கள், ஒலிபரப்பாளர்கள்
முதலியோரையும் உலகில் உலவும் இன்னோரன்ன அத்தனை மானிடர்களின் அறிவுக் கண்ணைத்
திறந்து நாடு விரும்பும் நல்ல குடிமக்களாக அவர்களை உருவாக்குபவர்கள் ஆசிரியர்கள்.
“ஆசிரியர்கள் சமுதாயம் எனும் கட்டத்தை நிர்மாணிக்கும்
சிற்பிகள்”, என்று கூறினார் ஓர் அறிஞர். அது முற்றிலும் உண்மை. அதனால், ஆசிரியர்களின் அரிய தொண்டினைப் போற்றிப் பாராட்ட உலகில் வாழும் மானிட இனம்
முழுமையுமே கடமைப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில்
சுமார் 32,000பேர் ஆசிரியர் பணிபுரிகிறார்கள். அவர்களுள்
தமிழாசிரியர்கள் சுமார் 750 பேர். அத்தமிழாசியர்கள் தொடக்கப் பள்ளியில் பயிலும்
சுமார் 13,000 மாணவர்களுக்கும் உயர்நிலைப் பள்ளியில் பயிலும் சுமார்
20,000 மாணவர்களுக்கும் தொடக்கக் கல்லூரியில் பயிலும் சுமார்
500 மாணவர்களுக்கும் தமிழ்மொழி கற்பிக்கிறார்கள்.
உயர்நிலை நிலையிலும் தொடக்கக் கல்லூரி நிலையிலும் தமிழாசிரியர்கள் தமிழ்மொழி
கற்பிப்பதோடு தமிழிலக்கியமும் சொல்லிக் கொடுக்கிறார்கள்.
சிங்கப்பூர்த்
தமிழாசிரியர்கள் தம் மொழி கற்பிக்கும் பணியோடு மக்கள் கழக நற்பணி மன்றங்களிலும்
ஏனைய சமூக அமைப்புகளிலும் பங்குப் பற்றிச் சிங்கப்பூர்த் தமிழர்களின்
மேம்பாட்டிற்கும் தமிழ்மொழியின் வளர்ச்சிக்கும் பங்காற்றி வந்திருக்கிறார்கள்; பங்காற்றி வருகிறார்கள். அவர்களுள் சிங்கப்பூர்த் தமிழ்மொழிப் பண்பாட்டுக்
கழகம் தொடங்கப்பட்ட காலத்தில் பொதுச்செயலாளராக இருந்து பணியாற்றியவரும்
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் தலைவரும் பின்னர், சிங்கப்பூர்த் தமிழர் பேரவையின் தலைவராகப் பொறுப்பேற்றிருந்தவரும் தற்காலம்
பாஸ்கர் கலைக்கழகத்தின் இயக்குநராகவும் நிருத்தியாலயா கவின் கழகத்தின் துணைத்
தலைவராகவும் இருப்பவருமான திரு பா கேசவன், தமிழவேள் நாடக
மன்றத்தை நிறுவி பல்லாண்டுகள் சிங்கப்பூரில் தமிழ் நாடகக்கலை வளர்ச்சிக்குப்
பாடுபட்டவரும் சிங்கப்பூரின் பழம்பெரும் எழுத்தாளரும் தற்காலம் பணி ஓய்வு பெற்றும்
தொடர்ந்து இலக்கியம் படைத்து வருபவருமான திரு மு தங்கராசன், கல்வியமைச்சின் தமிழ்ப் பிரிவிற்குப் பலகாலம் பொறுப்பாகவிருந்து தமிழ்மொயினைச்
சிங்கப்பூர்ப் பள்ளிகளில் சிறப்பான முறையில் கற்பிக்க உதவி புரிந்தவரும் பணி ஓய்வு
பெற்றபின் ‘லட்சுமியின் தமிழ் மொழி அகராதி’ என்னும் அரிய நூலை வெளியிட்டவருமான திரு சி முத்தையா, சிங்கப்பூர்த் தமிழிலக்கியத்தினை உலக அரங்கிற்றுக் கொண்டு சென்று நிறுத்திய
முனைவர் சுப திண்ணப்பன், சிங்கப்பூர்த் தமிழாசிரியர்களின் தமிழ் கற்பித்தல்
திறனை உலக நாடுகளில் பரப்பிய முனைவர் கா இராமையா, சிங்கப்பூர்த்
தமிழாசிரியர் சங்கத்திற்காக உலகத் தமிழாசிரியர் மாநாட்டை ஏற்பாடு செய்து
வெற்றிகரமாக நடத்தியவரும் தமிழ்மொழி வளர்ச்சி, தமிழாசிரியர்
மேம்பாடு ஆகியவற்றுக்கப் பாடுபட்டவரும் பணி ஓய்வு பெற்ற பின்னர், ஆன்மீகத் துறையில் அளவிலா நாட்டம் கொண்டு பல நூல்கள் எழுதி வெளியிட்டு
வருபவருமான திரு வி ஆர். பி மாணிக்கம், சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத்தின் முன்னாள்
பொருளாளராக இருந்தவரும் பல சமூக அமைப்புகளில் தலைமைப் பொறுப்புகள் வகித்தவரும்
கடந்த 2008ஆம் ஆண்டு முதல் ‘தமிழ் அமுதம்’ என்னும் தமிழ்க் காலாண்டு இதழைச் சிங்கப்பூரில் தம் சொந்த முயற்சியில்
வெளியிட்டு வருபவருமான திரு பெ. சிவசாமி, சிங்கப்பூரில் தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி ஆகிய இருதுறைகளுக்கும் தாய்மொழித் துறைத்தலைவராக
உயர்வு பெற்றுப் பணிபுரிந்தவரும் முதன்மையாசிரியராகப் (Master Teacher) பதவி உயர்வு பெற்ற முதல்
தமிழாசிரியரும் தமிழிலக்கியப் பங்களிப்பிற்காகவும் சமூகப் பங்களிப்பிற்காகவும் ‘தமிழவேள் விருது‘ உட்படப் பல்வேறு
விருதுகளையும் பரிசுகளையும் பெற்றவருமான பொன் சுந்ரராசு, தமிழ் இலக்கியப்
படைப்பிற்காகத் ‘தமிழவேள் விருது‘ பெற்ற திருமதி
பூபாலன் போன்றவர்கள் குறிப்பிடத் தக்கவர்கள்.
மேலே
குறிப்பிட்டுள்ளவர்களன்றி, பல்லாண்டுகள் சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத்
தலைவராய் இருந்து பணியாற்றிய திருவாளர்கள் சாமி வீராசாமி, மில்டன் சைமன்
ராசு, தற்காலத்தில் சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத் தலைவராய் இருந்து அடக்கமாக
அதனை வழிநடத்திவரும் திரு சி சாமிக்கண்ணு, பொது வாழ்வில்
புகழ்பெற்று விளங்கும் திரு மு அ மசூது, திரு நல்லு ராஜ், திரு காசி
வீராசாமி, டாக்டர் சிவகுமாரன், டாக்டர் சீதாலட்சுமி, டாக்டர்
வேல்முருகன், டாக்டர் இரத்தின வெங்டேசன், இரா துரைமாணிக்கம் போன்றோரும்
இன்னும் பலரும் பொதுவாழ்வில் ஈடுபட்டுத் தமிழ்த்தொண்டு புரிந்து வருகிறார்கள்.
இவர்கள் அனைவரும் உலகத் தமிழர்களின் ஒருமித்த பாராட்டுக்குரியர்கள்.
சிங்கப்பூரில் ஐந்து நாட்கள் வேலை அறிமுகமாகி ஆண்டுகள் பலவாகிவிட்டன. ஆனால், சிங்கப்பூர்த் தமிழ் அமைப்புகள் பெரும்பாலும்
தமிழ்மொழிப் போட்டிகளை வார இறுதி நாட்களிலேயே ஏற்பாடு செய்து நடத்துகின்றன.
அவர்களையும் குறை சொல்வதற்கில்லை. ஓய்வு நாட்களில்தான் அவர்களும் பொதுத் தொண்டில் ஈடுபட முடியும். அவ்வாறு
ஏற்பாடு செய்யப்படும் தமிழ்மொழிப் போட்டிகளுக்குத் தம் மாணவர்களைத் தயார் செய்து
சனிக்கிழமைகளிலும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் தமிழாசிரியர்கள் அழைத்துச் செல்லத் தயங்குவதில்லை. தம் ஓய்வைவிட
தம்மிடம் பயிலும் மாணவர்களின் உயர்வு முக்கியம் என்று அவர்கள் கருதுகிறார்கள்.
தொடக்கக் கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்படும் சொற்சிலம்பம், உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்படும் சொற்களம், தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்படும் விவாத மேடை போன்ற போட்டிகள், நற்பணி மன்றங்களும் சமூக அமைப்புகளும் நடத்தும் பல்வேறு தமிழ்மொழிப் போட்டிகள்
அதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுக்களாகும். அந்த வகையில் தமிழாசிரியர்கள் தம்
அர்ப்பணிப்பு உணர்வால் உயர்ந்தோங்கியுள்ளார்கள் என்று உறுதியாகக் கூறலாம்.
அதற்காகச் தமிழ் ஆசிரியர்கள் அனைவருக்கும் ஒரு கைகூப்பு! அவர்களுக்கு இனிய
ஆசிரியர் தினவாழ்த்துக்கள்!
மானிடச் சமூகத்தில்,
‘ஓர் ஆசிரியரால் ஏற்படும் விளைவுகள் எல்லையற்றவை
‘ஓர் ஆசிரியரால் ஏற்படும் விளைவுகள் எல்லையற்றவை
தன்னுடைய தாக்கங்கள் எங்கே நிறைவு பெறுகின்றன என்று
அவராலாயே சொல்ல முடியாது’
அவராலாயே சொல்ல முடியாது’
-
ஹென்றி அடாம்ஸ் (Henry Adams)
என்ற ஆறிஞர்
கூறுகிறார். அந்த அறிஞர் பெருமகனின் அமுத வாக்கினை நெஞ்சில்
நிறுத்தி, சிங்கப்பூர் ஆசிரியர்களுக்கும்
உலக ஆசிரியர்களுக்கும் சிரந்தாழ்த்தி வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்வோம். வாழ்க
ஆசிரியர்கள்! வளர்க அறிவுப் புரட்சி!!
மிகு அற்புதம் தேவையான நேரத்தில் இளையர்களும் புதிய குடியைரிகளும் அறியும் வண்ணம் தரப்பட்ட முழுவிளக்கக் கட்டுரை. ஆசிரியருக்குப் பாரட்டுகளும் வாழ்த்துகளும்
ReplyDeleteதொடரட்டும் தங்கள் பணி.
வாழ்த்துக்களுடன்
முனைவர் இரத்தின வேங்கடேசன்
உங்கள் பாராட்டுக்கு நன்றி வெங்டேசன் ஐயா. எனது அண்மையக்காலத் துன்பத்திலிருந்து கொஞ்சமாவது சிந்தனை மாறுவதற்கு அந்த வலைப்பதிவு உதவும் என்ற நோக்கத்தில்தான் தொடங்கியுள்ளேன். உங்களது இனிய சொற்கள் புதுத் தெம்பையளிக்கின்றன.
Delete