Thursday, August 1, 2013

நமது நாட்டிற்கு வெளிநாட்டுத்திறனாளர்கள் தேவையா?




கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதற்கு நமது சிங்காரச் சிங்கையே எடுத்துக்காட்டு. ஏனென்றால் இயற்கை வளங்கள் எதுவும் இல்லாமல் மனிதவளத்தை வைத்தே நொடிக்கு நொடி பற்பல வளர்ச்சிகளையும், மாற்றங்களையும் கண்டு வருகின்றது. இத்தகைய அபார வளர்ச்சிக்கு ஏணியாகவும் தோணியாகவும் இருப்பவர்கள்  வெளிநாட்டுத் திறனாளர்கள் என்று கூறினால் சிலர் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றார்கள். ஆனால் அதிலும் நியாயம் இருக்கின்றது. சிலர் வெளிநாட்டுத்திறனாளர்கள் வேண்டும் என்று அவர்களுக்குச் சிகப்புக்கம்பளம் விரிக்கின்றார்கள். இதிலும் நியாயம் இருக்கின்றது. இந்த விவாதத்தை நாம் சற்று ஆராய்வோம்.

நமது நாட்டிற்கு வெளிநாட்டுத்திறனாளர்கள் மூலமாக இரண்டு விதமான முதலீடுகள் வருகின்றன. ஒன்று அறிவாற்றல் முதலீடு, மற்றொன்று பணமுதலீடு. சிங்கப்பூரின் பொருளியலை வளர்ப்பதிலும் உயர்த்துவதிலும் இவர்கள் பெரும்பங்காற்றுகின்றனர். இவர்களுக்குத் தோள்கொடுப்பவர்கள் வெளிநாட்டு உடல்திறனாளர்கள். இவர்கள் கட்டுமானப் பணியாளர்களாகவும், வீடுகளில் உழைக்கும் பணிப்பெண்களாவும் காட்சியளிக்கின்றார்கள். சிங்கப்பூரர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துபவர்கள் இந்த உடல்திறன் ஊழியர்கள்கள் தான் என்று தட்டிச்சொல்லலாம். ஏனென்றால் இன்றைய சொகுசான வாழ்க்கை வாழும் சிங்கப்பூரர்களால் செய்ய முடியாத பணிகளைத் தான் உடல் திறன் ஊழியர்கள் செய்கின்றாரகள். நமது சிங்கப்பூர்த் தம்பதிகளும், பெற்றோர்களும் தங்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள பணிக்குச் செல்வதால் அவர்களுக்குப் பணிப்பெண்கள் உதவிக்கரம் நீட்டுகின்றார்கள். நமது சிங்கப்பூரர்கள் பொருளீட்ட வசதியான தொழில் வாய்ப்புகளை அளிப்பவர்களில் பெரும்பாலோர் வெளிநாட்டு முதலீட்டாளர்களே! அவர்களை, அந்தப் பணமுதலாளிகளை வரக்கூடாது என்று நாம் கதவை மூடினால் என்னவாகும் என்பதை நாம் கொஞ்சம் கண்ணை மூடி கற்பனை செய்து பார்க்கவேண்டும். அறிவாற்றல் முதலீடு செய்பவர்கள் அவர்கள் நாட்டு மக்களின் வரிப்பணத்தில் படித்துப் பெற்ற அறிவை இங்கு வந்து செலவிடுகின்றார்கள். ஆதலால் இந்த இரு முதலீட்டாளர்களும் இன்று சிங்கப்பூரின் கண்கள் போன்றவர்கள்.
 இது அப்படியே இருக்கட்டும், இதனைச்சற்றுப் பார்ப்போம்.  நம் நாடு இன்று எதிர்நோக்கும் சவால்கள் யாவை ? இதனை ஆராய்வோம்.

நமது அரசாங்கம் எவ்வளவு தான் ஆசை வார்த்தைக் கூறினாலும் இன்றைய இளையோருக்குத் திருமணம் என்பதும் குழந்தை பெறுவது என்பதும் வேப்பங்காயாகச் கசக்கின்றது. இதனால் குழந்தைப் பிறப்பு விகிதம் மண்ணைத் தொடுகின்றது. ஆனால், மூப்பு அடைந்து வரும் சிங்கப்பூரர்கள் எண்ணிக்கையோ விண்ணைத் தொடுகின்றது. இதில் திருமணமானத் தம்பதிகளின் விவாகரத்துக் கூத்துகளும் எல்லை மீறிப்போகின்றது. இவ்வாறாக நாட்டில் இருக்கும் ஒரே மக்கள் வளம் குறைந்து வந்தால், மனிதவளத்தை மட்டுமே நம்பி உள்ள நம் நாட்டின் கதி அதோ கதி தானே

இவ்வாறு உள்நாட்டு மனித வளம் குறைவாக இருக்கும் நம் நாட்டிற்கு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வரமாட்டார்கள். பிறகு நம் மக்கள் எங்கு சென்று வேலை தேடுவது அல்லது செய்வது. நம் நாட்டில் தற்போது இருக்கும் முதலீட்டாளர்களும் மூட்டைக்கட்டிவிடுவார்கள். பிறகு நமது பொருளியலும் ஆட்டங்கண்டுவிடும். இதனால் நமது சொகுசு வாழ்க்கையும் நிலைக்குலைந்துவிடும்.

தற்போது நம் நாட்டில் இருக்கும் இளையோர் அனைவரும் பட்டதாரிகளாக இருக்க வேண்டும் என்ற கொள்கையை அரசாங்கம் வலியுறுத்துகின்றது. இந்த நல்ல காரியம் நடந்தால் எதிர்காலத்தில் அனைவருக்கும் வேலைவாய்ப்பும், கைநிறைய காசும் கிடைக்க வேண்டும். அதற்கு மேலும் பல வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க வேண்டும். உடனே சிலர், ’’ நம் அரசாங்கமே வேலை வாய்ப்புகளை உருவாக்கலாமே’’ என்பர். இன்று இயற்கை வளங்கள் உள்ள நாடுகளே வெளிநாட்டு முதலீடுகளைக் சிகப்புக்கம்பளம் விரித்து வரவேற்கும் போது, ஒன்றுமில்லாத நாம் அதை விட வீரியமாக விரைவாக செயல்பட்டு வரவேற்க வேண்டும். இதனைப்  பொருளாதாரம் தெரிந்தவர்கள் உணர்வார்கள், அறிவார்கள். அதாவது நமது கையிருப்புப்பணத்தை எடுத்து அரசாங்கம் கட்டடங்களிலோ, தொழில்துறையிலோ முதலீடு செய்துவிட்டால் கையிருப்புக்குறைந்து விடும். இதனால் உலக நிதி நிறுவனம் நமது நாணயத்தின் மதிப்பை உயர அனுமதிக்காது. நாணய மதிப்புக்குறைந்து விட்டால் சிங்கப்பூரர்களின் சொத்தின் மதிப்புக்குறைந்து விடும். பிறகு உள்நாட்டுக் குழப்பங்கள் தலைத்தூக்கும்.

ஆனால், ‘’வெளிநாட்டுத்திறனார்களால் சிங்கை மக்களின் வாய்ப்புகள் பறிக்கப்படுகின்றன ‘’ என்கின்றனர் சிலர். இதனை ஒரளவு ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். வெளிநாட்டுத்திறனாளர்கள் இன்று தம்பதிகளாகவும், குழந்தைகளோடும் வருகின்றனர். அதிலும் பல வீடுகளில் கணவன் மனைவி இருவரும் வேலை பார்த்து நவீன வசதிகளோடு வாழ விரும்புவதால் கிடைத்த ஊதியத்திற்கு வேலை செய்கின்றனர். இதனால் பெரும் பொருள் செலவு செய்து கல்வி கற்ற நம் சிங்கப்பூர்களுக்கு அதற்கு ஏற்ற ஊதியம் கிடைக்காத நிலையை உருவாக்கி விட்டனர் இங்கு வந்துள்ள வெளிநாட்டுத்திறனாளர்கள். மேலும் நன்கு படித்த வெளிநாட்டுத்திறனாளர்களின் குழந்தைகள் மரபியல் ரீதியாகவும், குடும்பச்சூழலின் காரணமாகவும் நன்கு படித்து நம் நாட்டு மாணவர்களுக்குப் போட்டியாக அமைந்து மன உளைச்சல் கொடுக்கின்றனர். நம் இளையோர் தேசிய சேவை முடித்து விட்டு, பிறகு பட்டம் பெற பல்கலைக்கழகம் சென்றால் அங்கும் வெளிநாடு மாணவர்களுக்குத் தான் கொண்டாட்டம், நம் மாணவர்களுக்குத் தான் திண்டாட்டம்

ஆகவே வெளிநாட்டினர் வருகையால் போட்டித்தன்மை உருவாகியுள்ளது என்பது உண்மையே! ஆனால் அனைத்து நிலைகளிலும் நமது நாடு சிங்கப்பூரர்களுக்குத் தான் முன்னுரிமை வழங்குகின்றது. திடீரென்று பொருளியில் வீழ்ச்சி ஏற்பட்டு ஊழியர்கள் வேலை இழக்க நேரிட்டால் முதலில் வேலையிலிருந்து நீக்கப்படுவது வெளிநாட்டினரைத் தான். ஆகவே வேலை இழப்புப் போரில் சிங்கப்பூரர்களின் வேலை பாதுகாப்புக் கவசமாக வெளிநாட்டினர் இருந்து நம் சிங்கப்பூரர்களின் வேலையைப் பாதுகாக்கின்றார்கள் என்றால்  அது மிகையாகாது.

மேலும் வெளிநாட்டினர் வருகையால்  வீட்டு விலை ஏறிவிட்டது என்கிறார்கள். அதனையும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். வெளிநாட்டினர் நேரடியாக வீடமைப்பு வளர்ச்சிக்கழக  வீடுகளை வாங்க முடியாது. ஆதலால் வீட்டை நம் சிங்கப்பூரர்களிடம் இருந்து வாங்குவதால் சிங்கப்பூரர்களுக்குத் தான் லாபம். சில சிங்கப்பூரர்கள் தங்களது வீட்டின் ஒரு பகுதியை வெளிநாட்டினருக்கு வாடகைக்கு விட்டும் பொருள் ஈட்டுகின்றனர். இவ்வாறு வெளிநாட்டினர் பலர் நம் சிங்கப்பூரர்களுக்குப் பணம் காய்க்கும் மரமாகத் தான் விளங்குகின்றார்கள்

ஆனால் ஆக்கத்திற்குப் பயன்படும் ஒரு கத்தி எவ்வாறு அழிவிற்குப் பயன்படுகின்றதோ அதுபோல வெளிநாட்டினரால் நம் நாட்டிற்குப் பல இடையூறுகளும் ஏற்படுகின்றன. வன்செயல், கண்ட இடங்களில் எச்சில் திப்புவது, குப்பை போடுவது, விபச்சாரம் போன்ற சட்ட ஒழுங்குப்பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. பொருள் ஈட்டுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு இருக்கும் வெளிநாட்டினர் இங்கு பொருளியில் வீழ்ச்சி ஏற்பட்டால் பறந்துவிடுவர். . ‘'அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவை போல்''. மேலும் வெளிநாட்டுத்திறனாளர்களோ அல்லது அவர்களது வாரிசுகளோ தேசியசேவையிலும் ஈடுபடமாட்டார்கள். ஆதலால் வெளிநாட்டினரை நம்பி நம் நாடு இருந்தால் அது மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கின கதை போல் ஆகிவிடும்.
ஆதலால், சிங்கப்பூரர்களாகிய நாம்  சொந்தக்காலில் நிற்கும் நிலைக்கு உருவாகுவோம். குடும்பத்தைப்பெருக்குவோம், கல்வித்திறன் மிக்க மக்களாக வளர்வோம். இவை நிறைவேறும்வரை  பொருளாதார வளத்தோடு நவீன வசதிகளோடு வாழ்வதற்காக வெளிநாட்டு ஊன்றுகோலைப் பயன்படுத்துவோம்.மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமும் உண்டு குணமும் உண்டு. மணமும் குணமும் எங்கிருந்துவந்தாலும் ஏற்றுக்கொள்வது வல்லார் பண்பு. இன்று அமெரிக்க ஐரோப்பியநாடுகள் வெளிநாட்டிரைவைத்தை வளர்கின்றது. ஆகவே ஒரு நாடு வளர்ச்சி அடைய எது கிடைத்தாலும் அதனைநலமாகப்பயன்படுத்தி வளமாக வாழ்வதுதான் இக்காலத்திற்கு ஏற்றது. ஊரோடு ஒத்த வாழ வெளிநாட்டினரோடும் ஒத்துவாழ்வோம்.உயர்வோம்.


 
செல்வி நாச்சமை

விக்டோரியா தொடக்கக் கல்லூரி

No comments:

Post a Comment