Thursday, August 1, 2013

சிங்கைப் பெண்ணே என் கேள்விக்கு உன் பதில் என்ன?



என் கேள்விகள்...

உருவிலும் சிறப்பிலும் நீ
     ஒத்திட்டாய் குறளைப் போலே
திருவிலும் திறத்திலும் நீ
     தொட்டது சிகரம் தானே?
உன்னிடம் வளங்கள் இன்றி
     உயர்ந்ததன் மர்மம் என்ன?
மேருபோல் அரண்கள் இல்லை
     ஆறுகளும் ஓடவில்லை
எண்ணெய் வளம் ஏதுமில்லை
புன்னைநிலம் கூடஇல்லை
தாழ்வுஇலாச் செல்வம் பெற்றே
     தழைத்தது என்ன பெண்ணே?

உலகையே வியக்கச் செய்யும்
     உத்திதான் என்ன பெண்ணே? நீ
திரவிய தேசம் ஆன
     திரைக்கதை சொல்லு பெண்ணே
ஆண்டொன்று போனாலே
     வயதொன்று ஏறுதம் மா
நாற்பதைத் தாண்ட யிலே
     நரைவந்து பார்க்குதம்மா
நாற்பத்து மூன்றிலும் நீ
     நரை வராமல் இருப்பதென்ன?
வெள்ளிமுடி உனக்கு இல்லை
     வெற்றிமுடி சூடிக் கொண்டாய்!

பத்தாண்டுக் கால மாகஉன்னைப்
     பக்கத்தில் பார்த்திரு க்கேன் 
பலவற்றைப் பார்க்கை யிலே
     அங்கேஅப்படி இங்கே இப்படியென
ஒப்பிட்டு ஓய்ந்த தில்லை – இதை
        நான் மட்டும் சொல்லவில்லை
தெருவிலே பிச்சைக் காரன்
     தென்பட்ட தில்லை யம்மா?
பசியிலே வாடும் மக்கள்
     பார்த்ததே இல்லை யம்மா?
வெள்ளிப் பணமதிப்பு மட்டும்
     விண்ணையே முட்டு தம்மா!

சிங்கைப்பெண்ணே! நீ சிறந்த விதம் சொல்லுபெண்ணே!!


அவள் பதில்கள்...

மதியுரைத் தலை களாலே
     மலர்ந்ததென் வெற்றி என்பேன்
மனித வளத்திலே சிறந்தேன் ஐயா
மக்களே வைரம் ஐயா
தொலைநோக்குப் பார்வை உண்டு;
     தொடர் முன்னேற்றம் எதிலும் உண்டு
உழைப்புநீர் வேர்வை யாக
      ஓடுது ஆறாய் இங்கே!
ஒற்றுமையும் கட்டுப் பாடும்
      ஓங்கியது அரணாய் இங்கே
வேகமாய் உழைப்பதில் இவரை
     விஞ்சிட எவரும் இல்லை
வெட்டியாய்ப் பேச மாட்டார்
     அரசின்சொல் தட்ட மாட்டார் 
அத்தனைக்கும் முத்தாய்ப்பாக
வேந்தமைவு வெற்றி என்றார்
வள்ளுவனார் கூற்றைப் போல
     வாய்த்தது வேந்தெ னக்கு
வெற்றிமேல் வெற்றி ஐயா
     வேறென்ன வேண்டும் ஐயா?




2013 ஆம் ஆண்டு சிங்கப்பூர் இலக்கிய பரிசு பெற்ற கவிஞர் இராம வயிரவன்

No comments:

Post a Comment