Thursday, August 8, 2013

சீர்மிகு சிங்கப்பூரின் நாற்பத்தெட்டாவது நாட்டு நாள் விழா




உலகத்தில் பரவலான நிலப்பரப்பைத் தனதாக்கிக் கொண்டுள்ள பெரிய நாடுகள் பல. சிறிய நிலப்பரப்பையுடைய நாடுகள் பலப்பல. அத்தகைய நாடுகளுக்கிடையில் உலக வரைபடத்தில் ஒரு புள்ளியாய் மையம் கொண்டிருக்கும் நாடு சிங்கப்பூர். உருப்பெருக்கிக் கண்ணாடி இருந்தால்தான் உருப்படியாகப் பார்க்க முடியும் என்று ஏளனமாய் எண்ணியோரும் இருந்தனர். அந்தச் சின்னஞ்சிறு நாடு நாற்பத்தெட்டாவது நாட்டு நாளைக்  கொண்டாடுகிறது உலகம் வியக்கும் வண்ணம்! இது விந்தையிலும் விந்தையென வியப்படைவோரும் இருக்கலாம்.
வாழ்வதற்கு வளமான நிலமில்லை. உண்ணும் உணவிற்கு விளைவில்லை. அவ்வளவு ஏன்? குடிப்பதற்குத் தண்ணீர்கூட இல்லை. இத்தகைய வேதனையான நிலையில்தான் சிங்கப்பூர் விடுதலை பெற்றது. உயிர் வாழ்வது எப்படி என்று மலைத்து நின்றனர் மக்கள். இது 1965ஆம் ஆண்டின் சூழல். அன்றைய நிலை அது.
இன்றைய நிலை என்ன?
வீறு கொண்ட வேங்கையாய், சீறிப்பாய்ந்த சிங்கமாய் விண்ணைமுட்டும் வெற்றிகளைக் குவித்து அகிலமே வியக்கும் வண்ணம் உலகத்தில் அழகொளி வீசிக்கொண்டிருக்கிறது சிங்கப்பூர்! நிதி நிலையில் உயர்ச்சி! மதி நிலையில் வளர்ச்சி! மக்கள் வாழ்க்கையில் மலர்ச்சி! வளர்ந்த நாடுகளின் பட்டியலுக்கு இடப்பெயர்ச்சி! அடேயப்பா, நம்ப முடியவில்லையே என்று வியக்கின்றனர் நான்கு திக்குகளிலும் வாழும் மக்கள். இந்த அற்புதங்கள் எல்லாம் எப்படி நிகழ்ந்தன?
மாயத்தால் மாற்றங்கள் ஏற்படவில்லை! மந்திரத்தால் பலன் கிட்டவில்லை! யாகத்தால் வளம் கொட்டவில்லை. மானுட ஆற்றலால் நாற்பத்தெட்டு ஆண்டுகளுக்குள் சிங்கப்பூர் ஒரு செல்வபுரியாக மாறி வரலாற்றைப் புரட்டிப் போட்டது. அறிவுடையார் எல்லாம் உடையார் என்ற குறள்நெறி மெய்ப்பிக்கப்பட்டது சிங்கப்பூரில்! அறிவும் ஆற்றலும் இறையாண்மையும் கொண்ட அரசியல் தலைவர்களின் வழிகாட்டுதலும் திறனும் புலமையும் உழைப்பும் கொண்ட மக்களின் பங்களிப்பும் சிங்கப்பூரை இமாலய வெற்றி பெறச் செய்து வெற்றிப் படிகளின் உச்சியில் கொண்டுபோய் நிறுத்தியது.
லீ குவான் இயூ என்ற அரசியல் தலைவரின் சட்டத்துறை மூளையில் உதித்த தொலையோக்குத் திட்டங்களின் வெற்றியால், 1959இல் மக்கள் செயல் கட்சி சிங்கப்பூரில் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது. மக்கள் செயல் கட்சியின் அன்றைய தலைமைச் செயலாளர் திரு லீ குவான் இயூ. தலைவர் திரு.டோ சின் சை. திரு.லீ குவான் இயூ பிரதமரானார். திரு டோ சின் சை சுகாதார அமைச்சுப் பொறுப்பையேற்றார். அவர்களுக்குத் துணையாக அறிவுத்திறனும் செயல்திறனும் மிகுந்த அமைச்சர் பெருமக்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தோள்கொடுத்து நின்றனர்.

     தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாய்ச் 
     சொல்லலும் வல்லது அமைச்சு  (குறள் 634)    

என்ற வான்மறை வள்ளுவரின் வாய்மொழிக்கிணங்கப் பொறுப்பிலிருந்த அமைச்சர்கள் நாட்டுருவாக்கத்திற்கு உகந்த நல்ல திட்டங்களைத் தீட்டினர்; தீட்டிய திட்டங்களைச் செயல்படுத்தினர். அதன் பயனாக முகிலைக் கிழித்து வெளிக்கிளம்பும் முழுமதியென முகிழ்த்தது நவீன சிங்கப்பூர்.
 சிங்கப்பூரின் தொழிற்சங்கத் தலைவர்கள், சமூகத் தலைவர்கள், நாட்டு நலனுக்கு முன்னுரிமை கொடுத்த பொதுமக்கள் ஆகியோரின் தியாகமும் அர்ப்பணிப்பும் சிங்கப்பூரின் வளர்ச்சிக்குப் பேருதவி புரிந்தன.  
இந்த நவீனச் சிங்கப்பூர் உருவாகப் பாடுபட்ட முதல் தலைமுறை அரசியல் நிபுணர்களுள் பலர் இன்று நம்மோடு இல்லை. அமரர்களாகிட்ட  மரியாதைக்குரிய டோ சின் சை, கோ கெங் சுவீ, எஸ். ராஜரத்தினம்,  இ. டபல்யூ பார்க்கர், ஓங் எங் குவான், ஓங் பாங் பூன், கே.ஏ பர்ன், அகமட் இபுராஹிம், அகமட் மாத்தார் போன்றோரின் உழைப்பையும் தொண்டினையும் மறக்க முடியுமா?
 
இன்றும் நம்மோடு வாழ்ந்து மதியுரைஞர் அமைச்சராக வழிகாட்டிக் கொண்டிருக்கும் தொண்ணூறு வயதடைந்த அரிய அரசியல் தலைவரும் நவீன சிங்கப்பூரின் தந்தையுமான திரு லீ குவான் இயூவும் ஏனைய முன்னோடித் தலைவர்களும் சிங்கப்பூரின் நாட்டுருவாக்கத்திற்காகச் செய்த தியாகத்தையும்  அர்ப்பணிப்பையும் சிங்கப்பூரர்கள் என்றும் நன்றியோடு நினைவில் கொள்ள வேண்டும். நாம் இன்று அனுபவிக்கும் சொகுசான வாழ்க்கைக்குரிய நாடாகச் சிங்கப்பூரை அமைத்துக் கொடுத்தவர்கள் அப்பெருமக்கள்தாம். அவர்கள்  போட்ட அரசியல் வீதியில்தான் அடுத்தத் தலைமுறைத் தலைவர்கள் பயணித்து அரசியல்பணி புரிந்தனர்;  பணி புரிகின்றனர்.
1990ஆம் ஆண்டு, திரு கோ சோக் தோங் பிரதமர் பொறுப்புக்கு வந்தபோது இரண்டாம் தலைமுறைத் தலைவர்கள் அவரோடிணைந்து பணியாற்றிச் சிங்கப்பூரின் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்றனர். அவர்களுள் டாக்டர் டோனி டான் (இந்நாள் அதிபர்), புரோபசர் எஸ் ஜெயகுமார், டாக்டர் டே எங் சுவான், திரு எஸ் தனபாலன், திரு. ஓங் டெங் சியோங், திரு லீ சியன் லூங் (இந்நாள் பிரதமர்), திரு சிடெக் சானிஃப் ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள்.
 இன்றைய பிரதமர் திரு லீ சியன் லூங் தலைமையிலான மூன்றாம் தலைமுறை அரசியல் தலைவர்கள் 2005ஆம் ஆண்டு முதல் ஆட்சிப் பொறுப்பேற்று இன்று வரை அருமையாக ஆட்சி செய்து வருகின்றனர். 21ஆம் நூற்றாண்டின் தேவைகளை நிறைவேற்றும் விதமாகவும்  மின்னிலக்க யுகத்தில் வாழும் சிங்கப்பூரர்களின் வேணவாவிற்கு ஏற்றபடியும் பொறுப்பிலிருக்கும் அமைச்சர்கள் பணிபுரிந்து வருகின்றனர். செயல்திறமிக்க திருவாளர்கள் தியோ சீ ஹியன்,  தர்மன் சண்முகரத்தினம், க.சண்முகம், காவ் பூன் வாங், யாக்கூப் இபுராஹிம், விவியன் பாலகிருஷ்ணன் போன்றோர் நாட்டை வழிநடத்தி வருகின்றனர். நம் நாட்டு அரசியல் தலைவர்களின் அரிய பணியினால் கல்வி, பொருளியல், தொழில்துறை போன்ற அனைத்துத் துறைகளிலும் சிங்கப்பூர் வளர்ச்சி பெற்றுத் திகழ்கிறது.சிங்கப்பூர் வளம் பெற்றிருக்கிறது!
சிங்கப்பூரர்கள் நலம் பெற்றிருக்கின்றனர்! இந்த ஏற்றமிகு வாழ்வை நமக்கு ஏற்படுத்தித் தந்த அரசியல் தலைவர்களுக்குச் சிரந்தாழ்த்தி நன்றி சொல்வோம்.
நம் தாய் நாடாம் சிங்கப்பூருக்குத் இதயம் நிறைந்த தேசிய தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வோம்.
வாழ்க, சிங்கப்பூர்!

பல கதைகள்! ஒரு சிங்கப்பூர்!
தொடரட்டும் சிங்கைத் திருநாட்டின் வெற்றிகள்!!
முற்றும்

No comments:

Post a Comment