Sunday, September 8, 2013

“முனைவர் மு.வ.வின் புனைகதைகளில் (புதினங்கள்) வாழ்வியல் பண்புகள்”



மலைகளில் உயர்ந்தது இமயமலை. அதனினும் உயர்ந்தது  ‘எவரெஸ்ட்’  சிகரம்.   அந்தச் சிகரம் மனிதரால் எளிதில்  எட்ட முடியாததோர் உயரம். அதனை எட்டியவரை உலகம் சிகரத்தைத் தொட்டவர் என்று உச்சிமேல் வைத்துப் புகழ்கிறது. தமிழ் இலக்கியத்தின் சிகரத்தைத் தொட்டவர் ஒருவர் உண்டெனில், அவர் ‘டாக்டர் மு.வ’ என்று தமிழ்கூறும் நல்லுலகெங்கும் நாவினிக்கப் போற்றப்படும் டாக்டர் மு. வரதராசனார் ஒருவராகத்தான் இருக்க முடியும்.
டாக்டர் மு.வ ஓர் படைப்பிலக்கியவாதி மட்டுமன்று. அவர்  தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி முதலிய மொழிகளைக் கற்றுத் தேர்ந்த பன்மொழிப் புலவர். ஒரு தமிழ்ப் பேராசிரியர்.  எல்லாவற்றிற்கும் மேலாக அவர் ஓர் அறவோர்.  அன்பும் பண்பும் கனிவும் கருணையும் உள்ளம் நிறையக் கொண்டவர். 1912இல் இம்மண்ணில் தோன்றி 1974இல் இம்மண்ணுலகைவிட்டு மறையுமுன்னர்,  ‘தோன்றின் புகழொடு தோன்றுக’ என்னும் வள்ளுவப்  பெருமானின் வாக்கிற்கொப்ப நிறைவாழ்வு வாய்ந்த  நிறை மனிதர். அறுபத்திரண்டு ஆண்டுகளே வாழ்ந்தாலும் தாம் வாழ்ந்து முடித்த ஆண்டுகளில்  81 நூல்களை எழுதி தமிழுக்கு அணி சேர்த்தவர். அவருடைய வயதைவிட அவர் எழுதி முடித்த நூல்களின் எண்ணிக்கை அதிகம்.
சிறுவர் நூல்கள், நாவல், சிறுகதை,  சிந்தனைக் கதை, நாடகம், கடித இலக்கியம், வரலாறு, இலக்கியத் திறனாய்வு, இலக்கிய ஆராய்ச்சி, இலக்கிய வரலாறு, சிந்தனைக் கட்டுரைகள், மொழியியல் ஆகிய தமிழ்ப் படைப்புகளோடு  சங்க இலக்கியத்தில் இயற்கை (The treatment of Nature in Sangam Literature ), இளங்கோவடிகள் (Iilango Adigal) ஆகிய இரண்டு ஆங்கில  நூல்களையும்  வெளியிட்டுள்ளார்.
இத்துணை மேன்மைகள் பொருந்திய  சான்றோராகிய  “முனைவர் மு.வ.வின் புனைகதைகளில் (புதினங்கள்) வாழ்வியல் பண்புகள்” என்னும் தலைப்பில் கட்டுரை படைக்கக் கிடைத்த வாய்ப்பை நான் அரும்பேறாகக் கருதுகிறேன்.
எனது கட்டுரை அடியில் கண்டுள்ள கூறுகளின் அடிப்படையில் டாக்டர் மு.வவின் புனைகதைகளில் வெளிப்படும் வாழ்வியல் பண்புகளை வெளிக் கொணரும்.
1.  தனிமனித வாழ்வியல் பண்புகள் 
2. சமுதாய வாழ்வியல் பண்புகள்  
3.  மு.வவின் வாழ்வியல் பண்புகள் தமிழரிடையே ஏற்படுத்திய விளைவுகள் 
4.  சிங்கப்பூர்த் தமிழர் பெற்ற நன்மைகள்.
எனது கட்டுரைக்கு மூலவளங்களை வழங்கி முயற்சியை முடுக்கிவிட்ட நாவல்களாவன:  1. செந்தாமரை (1946), 2. கள்ளோ காவியமோ? (1947),  3. பாவை,  (1948),   4. அந்த நாள் (1948),  5. மலர்விழி (1950),   6. பெற்ற மனம் (1951),  7. அல்லி (1952),   8. கரித்துண்டு (1953),  9. கயமை (1956),  10. நெஞ்சில் ஒரு முள் (1956),  11. அகல் விளக்கு (1958),  12. வாடா மலர் (1960),  13. மண்குடிசை ( 1961).
பதினெட்டாம் நூற்றாண்டில் நாவல் இலக்கியம் மேல்நாட்டில் உதயமாயிற்று.  “நாவல் இலக்கியத்தின் பொற்காலம் என்று மதிக்கப்படும்  பதினெட்டாம் - பத்தொன்பதாம் நாற்றாண்டுகளின் இடைப்பகுதி முடிந்த பின்னரே, தமிழ் நாட்டில் நாவல் அரும்பத் தொடங்கியது.” ( டாக்டர்  இரா தண்டாயுதம், 1975). நாவல் என்ற  சொல்லினைத் தமிழில் புதினம் என்று வழங்குகின்றனர்.
தமிழ்மொழியில் படைக்கப்பட்ட முதல் புதினம் வேதநாயகம் பிள்ளை எழுதிய  ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ (1876) என்ற நூலாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் புதின இலக்கியங்கள் படைக்கப் புறப்பட்ட எழுத்தாளர்களுள் டாக்டர் மு.வவும் அடங்குவார் என்று டாக்டர்  இரா தண்டாயுதம் மேலும் தமது கட்டுரையில் குறிப்பிடுகிறார்.
டாக்டர் மு.வ தமது முதல் புதினமாகிய செந்தாமரையை எழுதுவதற்கு முன்னரே, சிறுவர் நூல்கள்,  கருத்துரை நூல்கள், இலக்கண நூல்கள், இலக்கிய நூல்கள்  என ஏறக்குறைய எட்டு நூல்களை எழுதி  தமிழ்ப் படைப்புலகில்  புகழ் பெற்றிருந்தார். அதனால், அவருடைய புதினங்கள் வெளியானபோது  அவை  பெரும் வரவேற்பைப் பெற்றன.
இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற  தமிழ் நாவலாசிரியர்களுள் ஒருவராகிய டாக்டர் மு.வ. திருக்குறளில் ஆழ்ந்த புலமையும் பற்றும் கொண்டதோடு காந்தியக் கொள்கைகளிலும் மிகுந்த  மரியாதைையுடைய அறவோராகவும் விளங்கினார். அவர் தம் புதினங்களை வாழ்க்கைக்கு வழிகாட்டும் வாழ்வியல் பண்புகளை உள்ளடக்கி மாந்தர் நலம்பெறும் நல்நோக்கத்திற்காகவே எழுதினார். அவரது படைப்புக்கள் பொழுதுபோக்குப் புதினங்களல்ல; பொருளுள்ள  வாழ்க்கைக்கு உதவும்  பண்புநலன்கள் பொதிந்திருக்கும்  வழிகாட்டி நூல்கள்.
“எதிர்கால நாவல்,  சமுதாயச் சிந்தனைக்குரியதாய் - சமுதாயத்தைப் புரிந்து கொள்ளப் பயன்படும் ஒரு சாதனமாய் - சுயபரிசோதனை செய்து கொள்வதற்கு உரிய ஒரு கருவியாய் - சமுதாயத்தில் காணப்படும் வழக்கங்கள், கொள்கைகள், கருத்துகள் இவை அனைத்தையும் பற்றி விவாதிக்கப் பயன்படும் ஒரு மேடையாய் இருக்கும்.” என்பது அறிஞர் எச். ஜி. வெல்ஸ்சின் கூற்றாகும். அக்கூற்றுக்கு ஏற்ற விளக்கமாய் அமைந்திருப்பவை டாக்டர் மு.வவின் நாவல்கள்.
டாக்டர் மு.வ அவர்கள் தமிழர்களின் ஒரு பக்கத்தையும் மறுபக்கத்தையும் அறிந்தவர்.   தமிழர்களின் வரலாறு, பண்பாடு, நாகரிகம், கலாசாரம், சமய நம்பிக்கை போன்றவற்றை நன்கறிந்தவர். தமிழர்களின் பண்பாட்டுக் கருவூலமாம் சங்க இலக்கியங்களில் துறை போனவர். தமிழர்கள்  பற்றிய பல்துறை அறிவோடு வள்ளுவர் நெறியையும் உதவிக்கு உறுதியாகப் பற்றிக் கொண்டார்.  அவருடைய ஆழ்ந்த புலமையின்  பிழிவாகத்தான் அவருடைய நாவல்களைத் தமிழறிஞர் பெருமக்கள் நோக்குகின்றனர். அவ்வறிஞர்களின் கூற்றுக்கு வலு சேர்க்கிறது  புகழ்பெற்ற எழுத்தாளர் அகிலனின் கூற்று.
“பண்டை இலக்கிய ஆசிரியராய் இருப்போரில் சிலருக்குத் தமிழ்நாட்டின் இன்றைய இலக்கியங்களில் ஆர்வமிருப்பதில்லை. அவ்வாறே புதுமைப் படைப்பிலக்கிய ஆசிரியர்கள் சிலரும்  தங்கள் தொன்மை மரபை அறிந்து போற்றுவதில்லை. இதற்கு விதிவிலக்காக அமைந்தவர் டாக்டர் மு.வ” ( அகிலன், இலக்கியக் கலை)
தம் நாவல்களில் வாழ்க்கையின் விழுமங்களை  எடுத்துக் கூறி  மக்கள் மனங்களில் விரும்பத் தக்க  மாற்றங்களை ஏற்படுத்தவே அவர் விரும்பினார். அந்நோக்கத்தை நிறைவேற்றவே  பொருத்தமான கதாமாந்தர்களை அவர் தம் புதினங்களில் படைத்தார்.  கதாபாத்திரங்கள் நாவல்களில் சுதந்திரமாக வலம் வந்து தங்கள் இயல்புகளை வெளிப்படுத்துவதற்குத் தகுந்தாற்போல் அவர் தம் புதினங்களில் கதைப் பின்னல்களை அமைத்தார். வாழ்கையின் விழுமங்களை வெளிப்படுத்தவே டாக்டர் மு.வ  கதைக் களத்தைப் பயன்படுத்திக் கொண்டார் என்று சுருக்கமாகக் கூறலாம்.
டாக்டர் மு.வ தம் நோக்கத்தில் வெற்றி பெற்றுள்ளார் என்பதுதான் அறிஞர்களின் ஒருமித்த கருத்தாகும். தமிழ்ச் சமுதாயத்தில் தாம் காண விரும்பிய மாற்றங்களைக் கதாமாந்தர்கள் வாயிலாகவும் அறவாழி என்றும் மெய்கண்டார் என்றும் அவர் தம் புதினங்களில் புகுத்தியிருக்கும் அறவோர்களின் வாயிலாகவும் அவர் அரிய கருத்துகளையும், வாழ்வியல் பண்புகளையும் தம் புதினங்கள் முழுமையிலும் தூவியுள்ளார். அவற்றுள் அவர் எடுத்துக் காட்டியுள்ள தனிமனித வாழ்வியல் பண்புகளை முதலில் கண்ணோட்டமிடுவோம்.

1.  தனிமனித வாழ்வியல் பண்புகள்:
Text Box: அ.      “எனக்கு நல்ல வழியில் அவ்வளவு நம்பிக்கை இல்லை. இது ஊழல் உலகம். நல்ல வழிக்கு  மதிப்பு    இல்லை.  ஏழையாக வாழத் துணிந்தவர்கள் மட்டுமே நல்ல வழியில் உறுதியாக நிற்கலாம். என்னால் முடியாது. என்னை உலகம் ஏய்த்துவிடும். முயல்களிடத்தில் மான்களிடத்தில் புல்லைக் கொண்டு செல்லாம். புலியிடத்திலும் ஓநாயிடத்திலும் கத்தியும் துப்பாக்கியுமின்றிப் போய்ப் பயன் என்ன?.”  ( தானப்பன், வாடாமலர்) 
ஆ.  “உலகம் இப்படித்தான்; தெரிந்து கொள். இங்கே இருப்பவர்கள் பலர் இப்படித்தான் இருக்கிறார்கள். இந்தப் பூக்களைப்போல் அழகான தோற்றத்தோடு வகை வகையான அலங்காரங்களோடு இருப்பார்கள். அவர்களைத் தொலைவில் இருந்து கண்ணால்  பார்த்து மகிழ வேண்டும்.  இந்தப் பூக்களில் எத்தனை நிறம், எத்தனை அழகு! பாரய்யா. இப்படித்தான் அவர்களும் நெருங்கிப் பழகினால், பொறுக்க முடியாது. உடனே வெறுப்புக் கொள்வாய்.”
இ.    “நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து என்ன  செய்து வருகிறோம் தெரியுமா? அறத்தை நம்பும் நல்லவர்களை முதலில் வறியவர்களாக்குகிறோம். பிறகு, இரக்கமற்றவர்கள் ஆக்குகிறோம். பிறகு, போக்கிரிகளாக மாற்றுகிறோம்.... மாசற்ற மனிதப் பண்போடு  கரவற்ற குழந்தைகளாய்ப் பிறந்து பண்போடு வளர்ந்தவர்களை முதலில் ஏழைகளாக்கி, இரக்கமற்ற மிருகங்களாக்கிப் பிறகு, பொல்லாத போக்கிரிகளாக்கி விடுகிறோம்.” (கரித்துண்டு,)
Text Box: ஈ.    “உலகத்தைத்  திருத்த நம் பங்கு முயற்சி செய்ய வேண்டும்.  பண வேட்டையையும் புகழ் வேட்டையையும்  அவற்றால் வரும் பலவகை ஏக்கங்களும் கவலைகளும் இல்லாமல் சமுதாயம் சீராக அமைவதற்கு உரிய வகையில் அறிவை வளர்ப்போம், அறநெறியைப் பரப்புவோம். உடன் பலன் காண முடியாமல் போகலாம். கவலை வேண்டா. எதிர்கால நன்மைகளைக் கருதிக் கடமையைச் செய்வோம். அங்கங்கே நல்ல விதைகளைத் தூவிச் செல்வோம். அதுவும் இயலாத நிலையானால், இயன்ற வரையில் நிலத்தைப் பண்படுத்திவிட்டுச் செல்வோம். அது நம் கடமை. நல்ல கடமையை உணர்ந்து உணர்ந்து செய்வதே நல் வாழ்க்கை”. (மெய்கண்டார் கூற்று,  மண்குடிசை)


உ.  “எப்போதும் வேகம் வேண்டா. வேகம் உன்னையும் கெடுக்கும். உன்னைச் சார்ந்தவர்களையும் கெடுக்கும்.

“விளையாட்டாக இருந்தாலும் விதிகளுக்குக் கட்டுப்பட வேண்டும் தெரியுமா? நீயே அரசன் என்று எண்ணிக் கொண்டு,  உன் விருப்பம்போல் ஆட முடியாது தெரிந்து கொள்.” ( ஒரு குரல் ஒலி, அகல்விளக்கு)

ஊ.      “ மனிதன் தன் உடம்போடு வாழ வேண்டும்;  மனத்தோடு வாழ வேண்டும். மின்சாரம் முதலிய சக்திகளைக் கண்டுபிடித்து வசதிகளைப் பெருக்குவது மட்டும் போதாது. நோய் குறைந்த உடம்பும், கவலை குறைந்த மனமும் பெறுவதற்கு வழி தேட வேண்டும்.” (மண்குடிசை)





டாக்டர் மு.வவின் புதினங்கள் எனும் புத்துலகச் சுரங்கத்தில் ஒளிரும் வாழ்வியல் பண்பு வைரங்களில்  சிலவற்றை  மேலே குறிப்பிட்டுள்ளேன்.  வாழ்க்கையில் ஏற்படும் ஏமாற்றங்களும் பாதிப்புகளும் ஒரு தனிமனிதனின் தகைசான்ற நற்பண்புகளில் குறை ஏற்பட வழிவகுக்கின்றன என்ற கருத்தும் கவர்ச்சித் தோற்றத்தால் உண்மை மறைக்கப்படுகிறது என்ற கருத்தும் முதல் மூன்று கூற்றுக்களின்வழி வெளிப்படுத்தப்படுகிறது என்பது மேலோட்டமான ஒரு கருத்து மட்டுமே! அவ்வாறெல்லாம் அவசரப்பட்டு ஒரு முடிவுக்கு வந்துவிடலாகாது. அக்கூற்றில், வாழ்க்கையில் எதிர்ப்படும் சிக்கல்களையும் சிரமங்களையும் எதிர்கொண்டு அறவழியில் நின்று வெற்றி காண்பதே சரியான முடிவாக இருக்கும் என்ற சத்திய ஒலி அடிநாதமாக ஒலிப்பதை ஒதுக்கிவிட முடியாது. ‘ கையும் காலும் குறைவரப் பெற்றவர்களால்  அது இயலும்’ என்று தமது அகல்விளக்கு நாவலில் குறிப்பிடுவது டாக்டர் மு.வவின் உறுதியான நம்பிக்கைக்குத் தக்க சான்றாகும்.. ‘எப்படியாவது வாழலாம் என்று எண்ணக் கூடாது. எப்படியும் வாழலாம் என்ற நம்பிக்கை கொள்ள வேண்டும்’ என்று வறுமையின் கொடுமையைப் பற்றிக் குறிப்பிடும்போது அவர் குறிப்பிடுவார். அதனை இங்குக் கருத்தில்  கொள்வது  தடைகளைக் கண்டு தளர்ந்து போகாத தனிமனிதப் பண்புகளைப் போற்ற உதவும்.
நான்காவது கூற்று,  உலகத்தில் வாழும் அனைவருக்கும் சொல்லப்பட்ட அரிய கருத்தாகும். உலகத்தில் கவலையற்று வாழும் ஒவ்வொருவருக்கும்  தன்னைப் போன்றே பிறரையும் வாழ வைக்கும் பொறுப்பு இருக்கிறது என்ற பொதுமைக் கருத்தை அக்கூற்று வலியுறுத்துகிறது. உலகத்தில் நல்லது நிகழ்ந்தால்தான் நல்வாழ்வு மலரும். அதற்கு அனைவரும் பாடுபட வேண்டும் என்கிறார். அது அனைவருடைய கடமை என்பதனையும் நினைவுறுத்துகிறார். அக்கறை உள்ளவர் செய்ய வேண்டுமென்றோ, அரசியல்வாதிகள் செய்ய வேண்டுமைன்றோ அவர் கூறவில்லை. அனைவரும் உலகத்திற்கு நன்மை செய்ய வேண்டும் என்று அறைகூவல் விடுக்கிறார். அவர் கூற்றை ஏற்று உலகில் வாழும் மக்களுள் ஆயிரத்தில் ஒருவர் செயலாற்ற முன் வந்தாலே உலகம் செழிக்கும். அன்புலகம் உருவாகும்.  “அன்பின்  வழியது உயர்நிலை, அஃதிலார்க்கு என்பு தோல் போர்த்த உடம்பு” என்ற வான்மறை வள்ளுவர் வாக்கின் விளக்கமும் அதுதானே!
அடுத்து இடபெற்றுள்ள இரண்டு கூற்றுக்கள், பல விருதுகளை வென்ற அகல்விளக்கு நாவலின்  முடிவாக அமைந்திருக்கிறது. அது தமிழ்நாட்டு மக்களுக்குக் குறிப்பாக இளையர்களுக்குக் கூறப்பட்ட பண்பு நலன் மட்டுமன்று, உலக மாந்தரினத்திற்கே சொல்லப்பட்ட மாசறு பண்பு நலனாகும்.

2. சமுதாய வாழ்வியல் பண்புகள்:
“டாக்டர் மு.வவின் நாவல்களையும் சமுதாயத்தையும் தனித்தனியே பிரித்துப் பார்க்கவே முடியாது.   மிக மேலான சிந்தனையில் நிற்கும் சான்றோராயினும், சமுதாயத்தை எவ்வளவு  கூர்த்த விழிகளோடு இவர் நோக்குகிறார் என்பதை இவருடைய நாவல்களே தெளிவாகக் காட்டும்.” என்று தமிழறிஞரும் டாக்டர்.மு.வவின் முன்னாள் மாணவருமாகிய டாக்டர் இரா. தண்டாயுதம்   குறிப்பிட்டிருப்பது  டாக்டர் மு.வலின்  சமுதாயப் பற்றிற்குத் தகுந்த அளவுகோலாக அமைகிறது.
“இன்றைய சமுதாயச் சிக்கல்களையும் போராட்டங்களையும் மு.வ தம் நாவல்களுக்கு உரிய பாடுபொருளாகக் கொள்வதுடன், தம் கதைமாந்தரின் மூளைக்கு உரிய சிந்தனைப் பொருளாகக் கொள்கின்றார்; இன்னும் சிலவற்றைச் சிந்தனைப் பொருளாகக் கொள்கின்றார். சமுதாயத்தைப் பாடுபொருளாகக் கொள்ளும்போது சமுதாயக் கொடுமைகளுக்குப் பலியாகி மடியும் உயழ்ந்த  மனிதர்களைப் பற்றிக் கூறி உள்ளத்தில் கொந்தளிப்பை உண்டாக்குகிறார். சிந்தனைப் பொருளாகக் கொள்ளும்போது சமுதாயத்தைத் சீர்திருத்தும் வாய்ப்பும் ஆற்றலும் ஏற்படும் வரையில், சிந்தனையளவில் எழுச்சியும் கிளர்ச்சியும் உண்டாக்கிவிடும் கற்பனைகளில் மூழ்குகிறார்.”  என்று டாக்டர் மோகன் கூறுவது டாக்டர் மு.வவின் சமூகம்  பற்றிய கொள்கையை மேலும்  அறிந்து கொள்ள உதவுகிறது. இனி, நாவல்கள் நவிலும் நற்கருத்துக்களாம் சமுதாய வாழ்வியல் பண்புகளைக் காண்போம்.
Text Box: அ.    “வாழ்க்கையில் நல்ல அமைப்பு இல்லையானால்,  கெட்ட சூழலுக்கு அடிமையாவது யார் குற்றம்? அரசியல் அமைப்பின் குற்றமே தவிர, துன்பத்திற்கு உள்ளானவரின் குற்றமல்ல.” (செந்தாமரை).

ஆ.     “பணத்தை வாங்கிக் கொண்டு தேர்தலில் ஓட்டுப் போடும் மக்களைக் குறை சொல்வதா? தேர்தலில் உழைக்கும் ஆட்களைக் குறை சொல்வதா? தேர்தலில் வென்ற பிறகு, செலவான பணத்திற்கு மேல் ஊழல் வழிகளில் சேர்த்துக் கொள்ள முயலும் உறுப்பினர்களைக் குறை  கூறுவதா? அவர்களுக்கு லஞ்சம் கொடுத்தாவது தம் வேலைகளை முடித்துக் கொள்ள விரும்பும் மக்களைக் குறை கூறுவதா?”   ( வாடாமலர்)
Text Box: இ.     “சமுதாயம் நன்கு வளர்வதற்கு, உண்மையான அன்பு வேண்டும். தூய உடல் வேண்டும். அறிவில்  தெளிவு வேண்டும். இந்த மூன்றும் ஒவ்வொருவரும் பெறும் வகையில் பாடுபட்டால், எதிர்காலத்தில் போட்டியும் குழப்பமும் ஆரவாரமுமில்லாமல் மக்கள் அமைதியாக வாழ முடியும். இதுவே எதிர்காலச் சமுதாயத்திற்கு வேண்டிய கால்கோள்”. ( வாடாமலர்)

ஈ.    “எனக்கு ஆணும் பெண்ணுமாகக் குடும்பங்கள் அன்பாக வாழ வேண்டும் என்பதில் ஆசை உண்டு. ஏன் என்றால், கணவனும் மனைவியுமாக அன்பாக வாழும் வாழ்க்கை இல்லை என்றால், காட்டில் உள்ளதைவிட நாட்டில் கொடுமையான விலங்குத் தன்மை இருக்கும்.  இந்த நாகரிகம் எதுவும் ஏற்பட்டிருக்காது. காட்டைவிடக் கொடுமையான உறுமல் நாட்டில் இருக்கும். அல்லது உலகில் பாதிப்பேர் பைத்தியக்காரராக இருப்பார்கள். ஆகையால், எப்போதுமே நான் காதல் வாழ்க்கையை ஆதரித்து வருகிறேன்”.   (மெய்கண்டார், நெஞ்சில் ஒரு முள்)

உ.      “மனிதன் மற்றொரு மனிதனைத் தன் வழிக்குக் கொண்டு வர முயல்கிறான். திருத்த முயல்கிறான். திருத்த முடியாதபோது கொல்ல முயல்கிறான். மனிதத் தன்மையில் வெற்றி கிடைக்காது என்று தெரிந்தவுடனே விலங்குத் தன்மைக்குப் பாய்கிறான். இதனால்தான் அறிவும் திறமையும் வளர்ந்த இந்தக் காலத்தில் கொடிய போர்கள் நடக்கின்றன.” (அந்தநாள்)
 
ஊ.  “சென்னையில் பச்சையப்பன் கட்டடத்திலிருந்து  பாரிமுனை வரையில் ஒருவர் நடந்து போனார் என்றால், அவருக்கு வாழ்க்கையில் பெரும்பகுதி புரிந்துவிட்டது என்று சொல்லலாம். ஆனால், அவருடைய கண்ணும் செவியும் ‘போதிய’ அளவுக்குப் பண்பட்டிருக்க வேண்டும். காணும் காட்சிகளிலும் கேட்கும் ஒலிகளிலும் வாழ்க்கையின் உண்மைகளை உய்த்துணரும் பயிற்சி அவருக்கு இருக்க வேண்டும். இருந்தால் பயன்பெற முடியும். பச்சையப்பனுக்கும் பாரிமுனைக்கும் இடையில் பரந்த உலகமே இருப்பதாகக் கூறலாம்.” ( கரித்துண்டு நாவலின் தொடக்கம்)


எ. “சென்னையில் நன்மையும் மிகுதி. தீமையும் மிகுதி. அவரவர் மனநிலைக்குத் தகுந்தாற்போல் எதையாவது பற்றிக் கொண்டு வாழலாம்”. (தானப்பன், வாடாமலர்)
நாம் இவ்வுலகில் பிறக்கிறோம். சமூகத்தில் வாழ்கிறோம். சமூகம் தரும் நன்மைகளைப் பயன்படுத்திக் கொண்டு உயர்கிறோம்.  சமூகத்தினின்று நன்மை பெறுவபராக மட்டுமன்றி,  அச்சமூகத்திற்கு நன்மை பயப்பராகவும் இருக்க வேண்டுமென்பதை டாக்டர் மு.வவின் அன்புள்ளம் காலந்தோறும் அறிவுறுத்திக் கொண்டும் நினைவூட்டிக் கொண்டும் வந்துள்ளதை அவருடைய நாவல்களில் மலிந்து கிடக்கும் நல்முத்துக்களாம் வாழவியல் பண்புகளிலிருந்து அறிகிறோம். “ஈதல் இசைபட வாழ்தல்.. ” என்ற குறள்நெறியை அறநெறியாகக் கொண்டவரால் வேறு எங்ஙனம் உரைக்க இயலும்?
தமிழர்களின் வாழ்க்கை அமைப்பும் அதனுள் மண்டிக்கிடக்கும் குறைகளும் ஊழல்களும் அரசியல் ஏமாற்று வித்தைகளும் டாக்டர் மு.வவின் உள்ளத்தில் துயரத்தை ஏற்படுத்துகின்றன. அதை அப்படியே விட்டுவிடவும் அவரது அறவுள்ளம் ஒப்பவில்லை. எனவே, அந்தக் குறைபாடுகளைத் தாம் படைத்த கதாமாந்தர்களின்வழி வெளிப்படுத்துகிறார். குறைகளைக்  கண்டறிந்து கூறுவதுதான் அவருடைய பணியாக அமைந்திருக்கிறது. அக்குறைகளைக் களையும் பொறுப்பைச் சமூகம்தான் ஏற்க வேண்டும். சமூகத் தலைவர்கள் மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். சமூகத் தொண்டு புரியும் தொண்டூழிய நிறுவனங்கள் அவற்றை மேலெடுத்துக் கொள்ள வேண்டும். அத்தகைய தொடர் நடவடிக்கைகள் அமைதியான முறையில் மனத்தளவில் அதிகம் நிகழ்ந்துள்ளதாகத்  தெரிகிறது.
அன்புக்கு முதலிடம் கொடுப்பது டாக்டர் மு.வவின் கருத்தாக  இருந்து வந்திருப்பதை அடிநாள் தொட்டு அவருடைய படைப்புக்களிலிருந்து அறிந்து கொள்ள முடிகிறது.  அன்புதான் குடும்ப வாழ்க்கைக்கும்  அடித்தளம் என்பதை அவர் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் வலியுறுத்தத் தவறுவதில்லை. உடல்நலமும்  மனநலமும்  தூய்மையாக இருப்பதும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அடிப்படையானதொன்று என்பதையும் அவர்  உணர்த்த்துகிறார்.
‘ஒரு மனிதன் மற்றொருவனைத் தன்வழிக்குக் கொண்டுவர முயல்கிறான்’ என்ற கூற்று எக்காலத்திற்கும் பொருந்தக் கூடியதும் நடைமுறையில் காணக் கூடியதாகவும் இருக்கிறது. இக்காலத்தில் பொது வாழ்க்கையில்  இதனைக் கண்கூடாகப் பார்க்கவும் முடிகிறது. ஓர் அமைப்பின் தலைவராக இருப்பவர் தம் முன்மாதிரியான நடத்தையாலும் ஒழுக்கத்தாலும் திறமையினாலும் தமது அமைப்பில் அங்கத்துவம் பெற்றுள்ள உறுப்பினர்களைக் கவர வேண்டும்.  அதுதான் நேர்மையான வழி. அவ்வாறு செயல்படுவோர் இருக்கவே செய்கின்றனர். ஆனால், பெரும்பாலான சமூக அமைப்புகளிலும் ஏனைய பொது அமைப்புகளிலும் தலைவரின் ஆணைக்கு அல்லது அவருடைய ஆசைக்கு ஏற்றபடி நடந்தால் மட்டுமே  அவ்வமைப்பில் உறுப்பினராக உள்ளோர் நன்மை பெறுவதையும் ஏனையோர் புறந்தள்ளப்படுவதையும் காண்கிறோம். மாற்றுக் கருத்துக் கூறும் உறுப்பினர்கள்  மாளாத துன்பத்திற்குள்ளாவதும் அதற்கு மேலும் அல்லலுக்கு  ஆளாவதும்கூட நிகழ்கிறது. இதன் காரணமாக, அமைதியான வழியில் பொதுத் தொண்டு செய்ய விழைவோர் ஒதுங்கி இருக்கும் நிலை ஏற்படுகிறது. ஆற்றலும் ஒழுக்கமும் சீரிய பண்பும் உடையோர் பொது வாழ்க்கையில் இல்லாத வெற்றிடம் ஏற்பட மேற்குறிப்பிட்ட நேர்மைக்குப் புறம்பான  சூழல் வழிகோலுகிறது.
ஆற்றோரங்களில்  மனித நாகரிகம் தோன்றியது. அதே போல் உலகின் புகழ்பெற்ற சில இடங்கள் அந்நாட்டின் நாகரிகத்தை வெளிப்படுத்துவனவாக அமையும். அவ்வகையில் சென்னை மாநகரத்தின் பாரிஸ் முனைக்குச் சென்றிருப்போர் சென்னை நகரின் நாகரிகத்தை யும் ஒருவகையில் தமிழ்நாட்டின் நாகரிகத்தையும் அறிய இயலும்.  சிறிய பூக்கடையிலிருந்து பெரும் பணம் குவிக்கும் பெரிய கடைத்தொகுதிகளும் சில்லறை வியாரம் செய்யும் கடைகளும் நிரம்பியுள்ள பரபரப்புமிக்க ஒரு நகர்ப்பகுதி அது. அங்கு நியாயமாக  வியாபாரம் செய்யும் வியாபாரிகளும் உள்ளனர். நியாயமற்ற முறையில்  ஏமாற்றிப் பணம் ஈட்டும் வியாபாரிகளும் உள்ளனர். அங்கு நல்லவர்களையும் சந்திக்கலாம். கொஞ்சம் ஏமாந்தால் பணத்தைத் திருடிச் செல்லும் கள்ளர்களையும் சந்திக்கலாம். வாழ்க்கையின் எல்லாத் தரப்பைச் சேர்ந்த மனிதர்களையும் மனிதர்களைப் போலவே தோன்றும் மனிதத் தன்மையற்றவர்களையும் சந்திக்கலாம். அங்குச் சென்று வருவது ஒரு பயன்மிக்க அனுபவமாக அமையும். இந்தக் கருத்து பாரிஸ் முனைக்குமட்டுமல்ல, பாரிலுள்ள புகழ்  பெற்ற நகரங்கள் அனைத்திற்கும் பொருந்தும். 


3.  மு.வவின் வாழ்வியல் பண்புகள் தமிழரிடையே ஏற்படுத்திய விளைவுகள்:
ஓர் எழுத்தாளர் தாம் வாழும் காலத்தில் சமூகத்தின்மீதும் தாம் பழகும் மனிதர்கள்மீதும் அக்கறை கொண்டு  மனுக்குலத்திற்கு நன்மை பயக்கும் என்று அவர் நம்பும் விழுமியங்களை வெளிப்படுத்தித் தம் படைப்புக்களைப் படைக்கிறார். அப்படைப்புக்களுக்குரிய சமூகத்தில் அவை எத்தகைய விளைவுகளை ஏற்படுத்துகின்றன என ஆராய்வது  எளிதான ஒரு செயலன்று. அத்தகைய விவரங்களைச் சேகரிக்கத் தோதாகத் தமிழில் ஆய்வுகள் செய்யப்பட்டதாகவும் தெரியவில்லை. நிலைமை அவ்வாறிருக்க, நான் இந்தத் தலைப்பில் எழுத எங்ஙனம் துணிந்தேன்? நான் நமது முன்னோர்கள்மீது கொண்ட நம்பிக்கையும் நானறிந்த தமிழர் பற்றிய பின்புலச் செய்திகளுமே ஆகும். முன்னோர் தீட்டியுள்ள எழுத்துக்களும் நான் சந்தித்த தமிழறிஞர்கள் கூறிய தகவல்களும் இப்பகுதியை எழுத என்னைத் தூண்டின.
“வரதராசனாரின் நாவல்களில் வரும் பாத்திரங்கள் எலும்பும் தசையும் கொண்டு ஆக்கப்படுவன அல்ல. மனித சிந்தனையின் பிரதிநிகளாக உள்ளனர்” என்று கூறுகிறார் பேராசிரியர் கைலாசபதி. அவரைப் போன்ற அறிஞர்களின்  கூற்றுக்கள் எனக்குப் பக்கபலமாக நின்று உதவின.
சற்றேறக் குறைய டாக்டர் மு.வவின் நாவல்கள் வெளியான காலத்தில், பகுத்தறிவுப் பகலவன்  பெரியார் ஈ.வே. ரா அவர்கள் தம் சுயமரியாதைக்  கொள்கைகளைத் தமிழர்களிடையே பரப்பிக் கொண்டிருந்தார். எல்லாருக்கும் கல்வி வேண்டும்; எல்லாருக்கும் வேலை வாய்ப்பு வேண்டும்; ஏற்றத் தாழ்வற்ற சமுதாயம் அமைய வேண்டும்; பிறப்பால் உயர்வு தாழ்வு பார்க்கக் கூடாது போன்ற தமிழர்களுக்கு நன்மை பயக்கும் சமதர்மக் கொள்கைகளை அவர் தமிழ்நாட்டில் பரப்பிக் கொண்டிருந்தார். தமிழர்களின் தொலைந்து போன முகவரியையும் வரலாற்றுப் பெருமைகளையும் பண்பாட்டுச் சிறப்புகளையும்  மீட்டெடுக்கப் பெரியார் ஈ.வே. ரா  பகுத்தறிவுப் பயணம் மேற்கொண்டிருந்த நேரம் அது. அது பகுத்தறிவுக் கொள்கையில் பற்றுக் கொண்டு பேசுவதையும் எழுதுவதையும் தமிழர்  பெருமையாக கருதிய காலமும் ஆகும். அக்காலத்தில் தமிழர்களின் அறியாமையைப் போக்கும் விதமாகவும் தமிழர்களின் பண்பாட்டுசுச் சிறப்புக்ளை நினைவுகூரும் விதமாகவும் சீர்திருத்தக் கருத்துக்களை உள்ளடக்கியும்  டாக்டர் மு.வவின் நாவல்கள் வெளிவந்தன. அக்கருத்துக்கள் சுயமரியாதைக் கொள்கைகளில் தற்றுடையோருக்குப் பிடித்திருந்ததால் அவரது கருத்துக்கள் பெரிதும் வரவேற்கப்பட்டன.
Text Box: “பூசையும் பத்தியும் ஒரு படியில் வளர்ச்சிக்கு வேண்டியவை. அந்தப் படியில் வளரத் தவறினால், அவைகள் சடங்குபோல் ஆகிவிடுகின்றன. உடம்போடு ஒட்டிய செயல்களாக நின்றுவிடுகின்றன. உள்ளம் வளர்வதற்கு உதவாமல் நிற்கின்றன.” 
“தன்னை எந்நேரமும் புகழுந்து பாடுவதைக் கடவுள் விரும்புவதில்லை; தான் வகுத்த அறநெறியில் வாழ்ந்து மற்ற உயிர்களிடத்தில் அன்பு செலுத்தித் தொண்டு செய்வதையே அவர் ஏற்றுக் கொள்வார்.” 





Text Box: “சந்திரன் நாடகத்தால் கெட்டான் என்றாய். பெண்ணால் கெட்டான் என்றாய். இப்போது இந்த அறையால் கெட்டான் என்கிறாய். எதுதான் உண்மை? மூடநம்பிக்கை எதையும் பேசும்போல் தெரிகிறது.”
“வருங்காலத்தில் தானே வருமென்றால், கொடுக்கிற தெய்வம் தானே கொடுக்கும் என்ற நம்பிக்கை இருந்தால், ஒன்றும் செய்யாமல், பந்தயங்களுக்குப் போகாமல், சீட்டுக் கட்டாமல் சும்மா இருக்க வேண்டும். பணம் தானே வந்து சேர வேண்டும்.”

மேலே குறிப்பிட்டுள்ள டாக்டர் மு.வவின் சீர்திருத்தக் கருத்துக்கள், கடவுள் மறுப்புக் கொள்கையை ஏற்றுக் கொண்ட சுயமரியாதைக்காரர்களுக்கும் மூடநம்பிக்கைகளை எதிர்த்த சீர்திருத்த எண்ணம் கொண்டவர்களுக்கும் ஏற்புடையதாக இருந்ததால் அவர்கள் டாக்டர் மு.வவின் கருத்துக்களைப் போற்றினர்.  இது மு.வவின் வாழ்வியல் பண்புகள், தமிழ்ச் சமுதாயத்தில் ஏற்படுத்திய மிகப் பெரிய நல்விளைவு எனலாம்.
படித்த இளைஞர் கூட்டத்தை டாக்டர் மு.வவின் நாவல்கள் பெரிதும் கவர்ந்தன. அவற்றைப் படித்து வாழ்க்கைப் பயணத்தில் தடுமாறாமல் சரியான வழியில் செல்ல அவை  அவர்களுக்கு உதவின.
பெரிய புத்தகக் கடைகளிலும் சாலையோரக் கடைகளிலும் டாக்டர் மு.வவின் நாவல்களை விற்பனை செய்யவும் அவற்றை விளம்படுத்தவும் கடைக்காரர்கள் தாமே படிக்கவும் ஆரம்பித்ததால்  அவை நாடெங்கும் விரைவில் பரவி புகழடையத் தொடங்கின.
பாரதிதாசன் பரம்பரை, பாரதியார் பரம்பரை என்றெல்லாம் படித்த இளைஞர்கள் பெருமையோடு தங்களை அடையாளப்படுத்திக் கொண்டதைப்போல்,  நான் டாக்டர் மு.வவின் நூல்களைப் படிப்பவன் என்று சொல்லிக் கொள்வதிலும் மு.வவின் நூல்களைப் பெருமையோடு வெளியில் தெரியும்படி எடுத்துச் செல்வதிலும் படித்தவர்கள் முனைப்புக் காட்டினர். அவர்களுள் பெரும்பாலோர் டாக்டர் மு.வவின் கொள்கைப்படி வாழ்க்கையை அமைத்துக் கொண்டதாகவும் தெரிகிறது. இவ்விதமாக, தீவிரமாக இல்லாவிட்டாலும் அமைதியான முறையில்  டாக்டர் மு.வவின் நாவல்கள் தமிழரிடையே நல்விளைவுவுகளை ஏற்படுத்தின என்பதை மறுப்பதற்கில்லை.
படித்தோர் கூடுமிடங்களிலும் சந்திக்கும் இடங்களிலும் டாக்டர் மு.வவின் நூல்களைப் பற்றிப் பேசுவதும் வாதிப்பதும் நிகழ்ந்தனவென்பதையும் அறிய முடிகிறது. தமிழ் மண்ணில் தமிழர்களிடையே மட்டும் டாக்டர் மு.வவின் நாவல்கள் நல்விளைவுகளை ஏற்படுத்தவில்லை. 1819ஆம் ஆண்டு சிங்கப்பூர் ஒரு குடியேற்ற நாடாக உருவெடுக்கத் தொடங்கியபோது அங்குக் குடியேறி வாழத் தலைப்பட்ட தமிழர்களிடையேயும்  அவை  பெரும் செல்வாக்குப் பெற்றன.



4. சிங்கப்பூர்த் தமிழர் பெற்ற நன்மைகள்.
சிங்கப்பூரில் 1950களிலும் 1960களிலும் தமிழர்கள்  செறிந்து வாழ்ந்தனர்.  சிராங்கூன், தஞ்சோங் பகார், நேவல் பேஸ், சாங்கி போன்ற பகுதிகளில் தமிழர்கள் மிகுதியாக வாழ்ந்தனர். அங்குத் தமிழ்க் கொண்டாட்டங்களும் விழாக்களும் வெகு சிறப்பாக நடைபெற்றன. தமிழ்மொழிப் புழக்கம் தடையின்றி நிகழ்ந்து கொண்டிருந்தது. அப்போது தமிழர்களிடையே டாக்டர் மு.வவின் நாவல்களும் ஏனைய நூல்களும் புகழ்பெற்றிருந்தன. டாக்டர் மு.வ பற்றி அக்காலத்தில் வாழ்ந்த  சிங்கப்பூர்த் தமிழறிஞர்களுள் சிலர்  நினைவு கூர்ந்தனர்.
“ டாக்டர் மு.வ அவர்கள் ஓர் உயர்ந்த பண்பாளர். தமிழர்களும் தமிழ்மொழியும் வளர வேண்டும், வளர வேண்டும் என்ற நோக்கமுடையவர். இந்த இரண்டும் வளரவேண்டும் என்றால், அவர்கள் தங்கள் மொழி, பண்பாடு, நாகரிகம், வரலாறு ஆகிய சிறப்புகளை அறிந்து கொள்ள வேண்டும்.  இந்த அறிவை அவர்களுக்குத் தருவது சங்க இலக்கியங்கள் என்பதிலே உறுதியான நம்பிக்கை உடையவர். அதனால்தான் சங்க இலக்கியங்களை எளிய நடையில் எல்லோரும் புரிந்து கொள்ளும் வகையில் தர வேண்டும் என்று அவர் விரும்பினார். டாக்டர் மு.வ அவர்களின் இந்த உணர்வு அவருடைய நாவல்களிலும் எதிரொலிக்கிறது. இந்த நாவல்களைப் படிப்பவர்கள் அதைத் தெளிவாக உணர முடியும். எடுத்துக்காட்டாக, கயமை, கரித்துண்டு, கள்ளோ காவியமோ? போன்ற நாவல்களைக் குறிப்பிடலாம்.” என்று  கூறுகிறார் சித்தார்த்தன் என்னும் புனைபெயர் கொண்ட இலக்கண ஆசிரியர் திரு பா. கேசவன்.
“இப்போது நினைத்துப் பார்க்கையில்,   டாக்டர் மு.வவின் கருத்துக்கள் தனிமை மிகுந்த எனது இளமைப் பருவத்தில் தனிமனித ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கப் பெருந்துணைபுரிந்துள்ளன. அவருடைய நூல்கள் என் எழுத்து வாழ்க்கையையும் நல்வழியில் ஆற்றுப்படுத்தின.” என்று மனம் நெகிழ்ந்து கூறுகிறார் சிங்கையின் புகழ்பெற்ற எழுத்தாளர் இராம கண்ணபிரான்.
இதே கருத்தையே,  கல்வியமைச்சின் ஓய்வு பெற்ற தமிழ்மொழிப் பாடத்திட்ட  வரைவுப் பிரிவுத் தலைவரும் மாணவர் தமிழ்மொழி அகராதி ஆசிரியருமான திரு சி முத்தையாவும் பிரதிபலிக்கிறார்.
 “வயது வரம்புக்குட்பட்ட நிலையில் டாக்டர் மு.வவின் எழுத்துக்கள் சில பாதிப்புக்களை ஏற்படுத்தின. அகல்விளக்கு நாவலில் வரும் சந்திரன், வேலய்யன் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் குறிப்பாகச் சந்திரன் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்களைக் குறிப்பிடலாம்.” என்று கூறினார்.
1960களில் படித்த இளைஞர்கள் அதிகமானபேர் டாக்டர் மு.வவின் எழுத்துக்களால் கவரப்பட்டிருந்தார்கள் என்பதை நானும் கண்டுணர்ந்திருக்கிறேன். சிராங்கூன் வட்டாரத்தில் நாங்கள் சந்திக்கும் போதெல்லாம் ஏதாவதொரு நாவலைப் பற்றிக் கலந்து பேசுவோம். அதற்கு நோரிசு   சாலையில் அமைந்திருந்த இராமகிருஷ்ண மிஷின் நூலகம் எங்களுக்குப் பெரிதும் உதவியது. இளைஞர்களுக்கு ஒரு கலங்கரை விளக்கமாய் டாக்டர் மு.வவின்  நூல்கள் குறிப்பாக நாவல்கள் திகழ்ந்தன.
சிங்கப்பூரில், படித்த தனி மனிதர்களுக்கு மத்தியில் டாக்டர் மு.வவின் நாவல்களும் மற்ற நூல்களும் குறிப்பிட்டுச் சொல்லுமளவிற்குச் செல்வாக்குப்  பெற்றிருந்த அதே வேளையில்,   சிங்கப்பூரின் கல்வித்துறை  டாக்டர் மு.வவின்  நூல்களால் பெரும்பயன் பெற்றது என்றுதான் கூற வேண்டும். டாக்டர் மு.வவின் நூல்கள் உயர்நிலைப் பள்ளிகளிலும் தொடக்கக் கல்லூரிகளிலும் பாடநூல்களாக வைக்கப்பட்டன.
பல்லாண்டுகள் தொடக்கக் கல்லாரிகளில்  பெற்ற மனம், கள்ளோ காவியமோ, கரித்துண்டு ஆகிய நாவல்கள் இலக்கியப் பாடநூல்களாகப் பயன்படுத்தப்பட்டன.  கரித்துண்டு இன்னமும் இலக்கியப் பாடநூலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. டாக்டர் மு.வவின் உலகப் பேரேடுகள், மூன்று நாடகங்கள் ஆகிய இருநூல்களும் இலக்கியப் பாடத்திற்குரிய கட்டுரை நூல்களாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
ஓய்வு பெற்ற மூத்த தமிழாசிரியரும் முன்னணித் தமிழ் எழுத்தாளருமான  திரு மு. தங்கராசன் டாக்டர் மு.வவின்  நாவலைக்  கற்பித்த தமது அனுவத்தைப் பகிர்ந்து கொண்டார்.
“ செந்தாமரை என்ற நாவலை உயர்நிலை இரண்டாம் வகுப்பிற்குக் கற்பித்தேன். சிறிய கதை. எளிமையான கதை. பிறமொழிச் சொற்கள் கலக்காத மொழி நடை.  எளிமையான குடும்பக் கதை. கடினமான மொழி நடை இல்லாத காரணத்தால் அனைவரையும் ஆட்கொண்டது.”
டாக்டர் மு.வவின் எழுத்தில் தமக்கிருந்த ஈடுபாடு குறித்தும்  திரு மு. தங்கராசன் குறிப்பிட்டார்.
“இளமையில் நெஞ்சில் ஒரு முள் என்ற புத்தகத்தைப் படித்தேன். நெஞ்சம் தெரிந்தது; முள் தெரியவில்லை.  நாற்பது வயதில் படித்தபோது நெஞ்சமும் தெரிந்தது; முள்ளும் தெரிந்தது.”
கடந்த 2010ஆம் ஆண்டு, சிங்கப்பூரில் நடைபெற்ற ஓர் இலக்கிய நிகழ்ச்சி டாக்டர் மு.வவின் இலக்கிய சிறப்புக்கு மேலும் கட்டியம் கூறுவதாய்் அமைந்திருந்தது.  தெம்பினிஸ் தொடக்கக் கல்லூரி, “கரித்துண்டு என்னும் கருவூம்” என்னும் தலைப்பில்  மாணவருக்கான ஒரு பயிலரங்கை நடத்திற்று. சிங்கப்பூரிலுள்ள 17 தொடக்ககல்லூரி மாணவர்களும் ஆசிரியர்களும்  கலந்து கொண்டனர். 8 தொடக்கக் கல்லூரி மாணவர்கள் பயிலரங்கில் கட்டுரை படைத்துப் பயனடைந்தனர் என்று நினைவு கூர்ந்தார், பயிலரங்கை ஏற்பாடு செய்த தெம்பினிஸ் தொடக்கக் கல்லூரித் தமிழ் விரிவுரையாளர் திரு நல்லுராஜ்.   கட்டுரைகள் அடியில் கண்டுள்ள தலைப்பில் படைக்கப்பட்டன.
1

2
கரித்துண்டு புகட்டும் வாழ்வியல் நெறிமுறைகள்
கரிதுண்டில் நான் கண்ட உன்னத மனிதர்கள்
3
கரித்துண்டு காட்டும் தமிழ்ச் சமுதாயம்,
4
கரித்துண்டுவழி கலைஞர்களின் வாழ்க்கை,
5
கரித்துண்டில் கற்பு நெறி
6
கரித்துண்டில் பண்பாட்டுச் சிந்தனைகள்
7
கரித்துண்டு காட்டும் மகளிர்
8
கரித்துண்டுவழி ஊனமுற்றோர் வாழ்க்கை
9
கரித்துண்டு காட்டும் பொதுவுடைமைச் சிந்தனைகள்


வயது ஏற்ப அவரவர் கொள்ளவிற்கு ஏற்ப டாக்டர் மு.வவின் கருத்துக்களைச் சிங்கப்பூரர்கள் ஏற்றுக் கொண்டனர்.  மறுபடியும் மறுபடியும் படிக்கத் தூண்டும் விதமாக அவருடைய நூல்கள் படைக்கப்பட்டிருந்தன. அவை சிங்கப்பூர்த் தமிழர்களைக் கவர்ந்திருந்தன. அதற்கு அந்நாவல்களில் இடம்பெற்றிருந்த வாழ்வியல் பண்புகளின் சிறப்பே காரணம் என்று கூறவும் வேண்டுமோ?
முடிவாக,
டாக்டர் மு.வ என்னும் அறநெஞ்சமுடைய அருந்தமிழரின் நாவல்கள் வயது வேறுபாடின்றி, நாடுகளின்  எல்லைக்கோடுகளை மீறித் தமிழர்களைக் கவர்ந்திருந்தன; கவர்ந்திருக்கின்றன. அந்நாவல்களில் ஒளிர்ந்த வாழ்வியல் பண்புகளைத் தமிழர்கள் போற்றினர்; அவற்றைப் பின்பற்றி நெறியான வாழ்க்கை வாழ்ந்தனர்; வாழ்ந்தும் வருகின்றனர்.  ‘மனிதர்கள் குறையுடையவர்கள். அதனால், அவர்களுடைய பேச்சிலும் எழுத்திலும் குறை இருக்கலாம்’ என்ற அவருடைய கருத்து மனிதர்களிடையே பிணக்கத்தைத் தவிர்த்து இணக்கத்தை ஏற்படுத்த உதவி இருக்கிறது.
‘அறிவியல் முன்னேற்றத்தை அறிந்தொழுக வேண்டும். நல்லது கெட்டது அறிந்து இளையர் சமுதாயம் வாழ்க்கை நடத்த வேண்டும். பாலியல் தொடர்பு வாழ்வில் அளவோடு இருக்க வேண்டும். மக்கள் வாழ்வின் விழுமியங்களை வழுவாது பின்பற்ற வேண்டும்’ என்பன  போன்ற வாழ்வியல் பண்புகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்பது  டாக்டர் மு.வவின்  பேரவா.
‘பெரியோர், சான்றோர்களோடு இளைஞர்கள் பழகி நன்னெறிகளைக் கற்றுக் கொள்ள வேண்டும். அது இயலாதபோது அவர்கள் எழுதிய நூல்களையாவது கற்று வாழ்வில் நெறியோடு வாழ வேண்டும்’  என்று டாக்டர் மு.வ இளையர்களுக்கு அறைகூவல் விடுக்கிறார்.
கல்விக் கூடங்களில் அவருடைய நூல்கள் பாடநூல்களாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. உலகில் நடைபெறும் மாநாடுகளிலும் பயிலரங்குகளிலும்  அவருடைய நூல்களும் நூல்களில் கூறப்பட்டுள்ள கருத்துகளும் கருப்பொருளாகக் கொண்டு ஆய்வுக் கட்டுரைகள்  படைக்கப்படுகின்றன. அச்செயல்கள் யாவும் டாக்டர் மு.வவின் நாவல்கள், காலத்தை வென்று நிற்கும் இலக்கியங்கள் என்பதை உரத்த குரலில் ஓங்காரமாய் ஒலிக்கின்றன. அந்த ஒலியால் தமிழர்கள் பெரும் பயன் பெற்றனர் என்று உறுதியாகக் கூறலாம்.
முற்றும்








இக்கட்டுரை எழுதுவதற்கு உதவிய துணை நூல்கள்:
1
டாக்டர் மோகன், இரா.,மு.வ களஞ்சியம், சென்னை: மணிவாசகர் பதிப்பகம், 2011
2
டாக்டர் மோகன், இரா., புனைகதைத் திறன், சென்னை: ஏரக வெளியீடு, 1980
3
டாக்டர் வீராசாமி, தா.வே., தமிழில் சமூக நாவல்கள், சென்னை: தமிழ்ப் புத்தகாலயம், 1978
4
டாக்டர் தண்டாயுதம், இரா.,  நாவல் வளம், சென்னை: தமிழ்ப் புத்தகாலயம், 1975
5
டாக்டர் சிவத்தம்பி., ஈழத்தில் தமிழ் இலக்கியம், சென்னை: தமிழ்ப் புத்தகாலயம், 1975
6
டாக்டர் இராமலிங்கம், மா.,  இருபதாம் நூற்றாண்டு தமிழ் இலக்கியம், சென்னை: தமிழ்ப் புத்தகாலயம், 1973
7
டாக்டர் வீரமணி, அ., சிங்கப்பூரில் தமிழ்மொழி வளர்ச்சி 1965 - 1990,  சிங்கப்பூர்: The Journal, 1994
8
டாக்டர் வரதராசன், மு. , செந்தாமரை, சென்னை:  பாரி நிலையம், 1946
9
டாக்டர் வரதராசன், மு. , கள்ளோ காவியமோ?, சென்னை:  பாரி நிலையம், 1947
10
டாக்டர் வரதராசன், மு. , பாவை, சென்னை:  பாரி நிலையம், 1948
11
டாக்டர் வரதராசன், மு. , அந்த நாள், சென்னை:  பாரி நிலையம், 1948
12.       டாக்டர் வரதராசன், மு. , மலர்விழி, சென்னை:  பாரி நிலையம், 1950
13.      டாக்டர் வரதராசன், மு. , பெற்ற மனம், சென்னை:  பாரி நிலையம், 1951
14.      டாக்டர் வரதராசன், மு. , அல்லி, சென்னை:  பாரி நிலையம், 1952
15.      டாக்டர் வரதராசன், மு. , கரித்துண்டு, சென்னை:  பாரி நிலையம், 1953
16.     டாக்டர் வரதராசன், மு. , கயமை, சென்னை:  பாரி நிலையம், 1956
17.    டாக்டர் வரதராசன், மு. , நெஞ்சில் ஒரு முள், சென்னை:  பாரி நிலையம், 1956
18.    டாக்டர் வரதராசன், மு. , அகல்விளக்கு, சென்னை:  பாரி நிலையம், 1958
19.    டாக்டர் வரதராசன், மு. , வாடாமலர், சென்னை:  பாரி நிலையம், 1960
20.    டாக்டர் வரதராசன், மு. , மண்குடிசை, சென்னை:  பாரி நிலையம், 1961

  

                                    - பொன் சுந்தரராசு


1 comment:

  1. பொன் சுந்தரராசுவின் இந்த ஆய்வுக்கட்டுரை மிக அற்புதம்
    இவரது வலைப்பதிவு தொடங்கப்பட்ட பிறகுதான்
    தமிழில் இவர் எவ்வளவு உயரம் என்பதை வியந்து பார்க்கத்தோன்றுகிறது
    வாழ்த்துக்கள்
    அன்புடன்
    கமலாதேவி அரவிந்தன்
    http://www.kamalgaanam.blogspot.com

    ReplyDelete