உலகில் வாழும் மனிதர்களுக்கு நாகரிகமும் பண்பாடும் இருகால்களாகும். இவ்விரு
சொற்களுமே மனிதன் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பெற்றுவந்துள்ள வளர்ச்சியினைச்
சுட்டுவனவாகும். இயற்கைப் படைப்பின் மணிமுடியாக விளங்குபவன் மனிதன். தனக்கே உரிய
சிறப்புப் பண்புகளாலேயே மனிதன் பிற விலங்குகளினின்றும் வேறுபடுகின்றான். அவனுடைய
மனமே அவ்வேறுபாட்டை உருவாக்குகின்றது. சமுதாய விலங்காகிய மனிதன் பிற மனிதர்களோடு
கலந்து வாழும்போது தன்னலத்தை ஒரளவு புறக்கணித்துப் பொதுநலத்தைப் பேண
வேண்டியவனாகிறான். இதற்குச் சில பண்புகள் தேவைப்படுகின்றன.
அன்பு, அருள், வாய்மை, தூய்மை, ஒப்புரவு, கண்ணோட்டம், ஈகை, நாணம் முதலிய பண்புகள் பிறரோடு கொள்ளும் நல்ல உறவினுக்கு
அடிப்படையானவைகளேயாம். இவ்வுறவு தன்னுடைய சிறு சமூக எல்லைக்கோட்டைக் கடந்து செல்கின்றது. இதுவே மனித குலத்தின் சிறப்புப்
பண்பாகும். மனிதனுடைய அறிவும் அனுபவமும் பண்புகளாக மட்டுமின்றிப் பருப்பொருளாகவும்
வெளிப்படுகின்றன. உணவு, உடை, உறையுள், சிற்பம், ஓவியம் போன்ற பிற பொருள்கள் வாயிலாகவும்
மனிதனின் வளர்ச்சி வெளிப்படுகின்றது. ஆகவே பண்பாடு அகப்பண்பாடு, புறப்பண்பாடு என்று இருவகை ஆகின்றது.
இவ்விரண்டையும் முறையே பின்பற்றி வரும் மனிதன் சிறந்த பண்பாளன் ஆகின்றான்.
பண்பாடு என்றால் என்ன?
பெரும்பாலும் சிறந்த வாழ்க்கைக்கு அடிப்படையாக அமைகின்ற உள்ளப்பாங்கின்
வெளிப்பாட்டையே பண்பாடு என்கிறோம். அந்த வெளிப்பாடு சுவையுணர்வாகவும், நடையுடை பாவனைகளாகவும் தோன்றும் வாழ்வின் பற்பல
போக்குகளையும் நிலைகளையும் குறிக்கும்.
உடலைப்பற்றிய நன்னிலை, மனத்தைப் பற்றிய
தூய்மைநிலை, பேச்சின் இனிமை
இவையெல்லாம் பண்பாட்டில் அடங்கும். மக்களின் வாழ்க்கை வரலாற்றில் அவர்கள் இயற்றிக்
கொண்ட கருவிகள், சமூகப்பழக்கம்,
வழக்கம், நம்பிக்கை, சமயம் முதலியவற்றைப் பண்பாடு என்ற சொல்லால்
குறிக்கின்றனர். மக்களின் அறிவு நலம், ஒழுக்க உயர்வு, கொள்கை நலம்,
பண்பு நலம், வாழ்க்கை நலம் ஆகியவை மென்மேலும் திருந்திய
நிலையே பண்பாடு எனப்படுகிறது என்றும் கூறலாம்.
ஓர் இனத்தின் பண்பாடு அதன் இலக்கியம், நடையுடை, மொழி, கலைகள், குறிக்கோள், சமயக்கொள்கை, அரசியல் வரலாறு, சமுதாயநிலை, பெண்களின் நிலை, அறிவியற்சிறப்பு, கல்வி நிலையங்கள் முதலியவை மூலம்
விளக்கமுறுகின்றது. சிலர் நாகரிகம், பண்பாடு இரண்டும் ஒன்றே என்பர். ஆனால் திரு.பாவாணர் அவர்கள், ``நாகரிகம் என்பது திருந்திய வாழ்க்கை, அது எல்லாப்பொருள்களையும் தமக்கும் பிறருக்கும்
பயன்படுத்துவது; உதாரணமாக
இலக்கணப் பிழையின்றிப் பேசுவதும், எல்லா வகையிலும்
துப்புறவாயிருப்பதும், காற்றோட்டமுள்ளதும்
உடல்நலத்திற்கேற்றதுமான வீட்டிற்குடியிருப்பதும், நன்றாய்ச் சமைத்து உண்பதும், பிறருக்குத் தீங்கு செய்யாமையும் நாகரிகக்
கூறுகளாகும்`` என்கிறார்.
மேலும், `எளியாரிடத்தும்
இனிதாகப்பேசுவதும், புதிதாய் வந்த
ஒழுக்கமுள்ள அயலாரை விருந்தோம்புவதும், இரப்போர்க்கிடுவதும், இயன்றவரை
பிறருக்கு உதவுவதும், கொள்கையும்
மானமுங்கெடின் உயிரை விடுவதும், பண்பாட்டுக்
கூறுகளாம். சுருங்கச் சொல்லின் உள்ளத்தின் செம்மை பண்பாடும், உள்ளத்திற்குப் புறம்பான உணவு, உடை, உறையுள் முதலியவற்றின் செம்மை நாகரிகமும் ஆகும்` என்கிறார் திரு. பாவாணர்.
``தனிமனிதனுக்கும் சமுதாயத்திற்கும் ஆழமான, அகலமான உறவை என்றும் அகலாமல் பேணிப்
பாதுகாக்கும் ஒழுக்கம்தான் பண்பாடு`` என்கிறார் மறைந்த குன்றகுடி அடிகளார்.
பண்பாட்டை ஏன் பின்பற்ற வேண்டும் ?
ஒரு மனிதனின் வாழ்க்கை மரம் போன்றது. ஒரு மரத்தின் வேர்கள் தண்ணீரைத்
தேடிச்செல்லும். அத்தண்ணீரில் சத்துப்பொருள்கள் இருக்கும். அத்தண்ணீர் அவ்வேரின்
வழியாக மரத்தைச் சென்று அடைகின்றது. அந்த வேர்தான் பூமியில் ஆழமாகப் பாய்ந்து
மரத்தைத் தாங்கி நிற்கின்றது. இவ்வேர்கள் முறையாக இயங்க வில்லை என்றால் மரத்தின்
கதி அதோ கதி தான். அதுபோலத் தனிமனிதனுக்கும், சமுதாயத்திற்கும் பண்பாடுகள் என்னும் வேர்கள்
இல்லை என்றால் `அடியற்ற மரம்போல்`
அம்மனிதனைக் கொண்ட சமுதாயம்
வீழும். ஒருவன் தனது இனத்திற்குள்ள பண்பாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றாவிட்டால்
அவன் ஆகாயத் தாமரைபோல் நிலையற்றவனாக ஆகிவிடுவான். தனது இனத்தின் பண்பாடுகளை ஒருவன்
பின்பற்றாமல், விலகிச் சென்றால்
அவன் சார்ந்த சமுதாயம் அவனை விசித்திரப் பிராணியாகப் பார்க்கும். ஆகவே, ஒவ்வொரு மனிதனும் நாகரிக மாற்றம் எப்படி
நடந்தாலும் தனது பண்பாட்டு நெறிமுறைகளைக் கைவிடாமல் பின்பற்ற வேண்டும்.
சங்க காலத்திலிருந்து நமது தமிழர்களின் முக்கிய அமைப்பாகச் சீர்பெற்று வளர்ந்து வந்துள்ளது நமது பண்பாடு.
அக்காலத்து மக்கள் பிழைப்பதற்கெனப் பாடுபட்டுச் செய்த முயற்சிகள் ஒன்றாகச் செய்து
வந்தால் நன்மைகள் அதிகரிக்கும் என்பதற்காகக் கூடி வாழத்தொடங்கினர். இதுவே சமுதாயம்
என்ற அமைப்பிற்குப் பாதை அமைத்துக் கொடுத்தது. சமுதாயத்தில் ஒற்றுமையாக வாழப் பல
நெறிமுறைகளை வளர்த்துக் கொண்டார்கள்; பழக்க வழக்கங்களைக் கையாண்டனர். இப்பழக்க வழக்கங்கள்தான் நாளடைவில் நமது
பண்பாடு மற்றும் கலாச்சாரங்களாக உருவெடுத்துள்ளன. அக்காலத்தில் இந்தப்
பண்பாட்டினைப் பின்பற்றுவதன் அவசியம் தென்பட்டது. மக்கள் தாங்கள் வாழும்
சூழ்நிலைக்கேற்ப ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து சமுதாயத்தின்மீது நம்பிக்கை
கொண்டு வாழ்ந்தார்கள். ஆனால், இன்றோ அதே
பண்பாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுவதின் அவசியம் என்ன? என்று நம்மில் பலர் கேள்விகள் கேட்கின்றனர்.
இக்கால சூழ்நிலைக்கு இப்பண்பாட்டு நெறிமுறைகள் தேவையற்றவை என்று சிலர் பிடிவாதமாக
வாதிடுகின்றனர். ஒரு மனிதனின் வளர்ச்சிக்கும் பெருமைக்கும் பண்பாடு தூண்டுகோலாக உள்ளது என்பதை உலகம் இப்போது உணரத்
தொடங்கி விட்டது. ஆணிவேர் ஆட்டம் கண்டவுடன் சிலர் விழித்துக் கொண்டுள்ளனர்.
இக்கட்டுரை, விழித்துக்
கொண்டோருக்கு வழிகாட்டியாகவும், தூங்குவோருக்கு
அபாயச்சங்காகவும் அமைகின்றது.
பண்பாடு என்பது நம்மிடையே பிறப்பிலிருந்து வளர்க்கப்பட்ட, வளர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும். ஒருவரிடம்
பண்பாடு உறைந்து கிடைப்பதன் விளைவால் அவர் வாழ்வில் சிறப்பாக மதிப்புப் பெற்று
வாழ்வார். நம் பண்பாட்டைப் பின்பற்றுவதால் நம்மிடையே கட்டுப்பாடும் மனநலமும்
வளர்ச்சியடைகின்றது. பண்பாட்டின் நெறிமுறைகளை முறையே கையாண்டு பின்பற்றி வருவதால்
ஒன்றின் முக்கியத்துவமும், கட்டுப்பாட்டுடன்
அதை நடத்துவதும் ஒருவருக்குத் தெரிவிக்கப்படுகிறது. காலங்காலமாக இப்பண்பாட்டினைப்
பின்பற்றும் அன்பர் ஒருவர்
சுயக்கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்வார். அத்துடன் இந்நெறிமுறைகளைத்
தங்களின் வாரிசுகளுக்கும் கற்றுக்கொடுப்பார். பெற்றோரிடம் கற்ற நற்பழக்க
வழக்கங்களைக் கொண்டு பிள்ளைகள் தங்களையே மேம்படுத்திக்கொள்வர்.
இது வெறும் வாய்ப்பேச்சு அல்ல. பண்பாட்டினைப் பின்பற்றுவதால் வரும் நல்ல
விளைவுகளை நாம் கண்ணால் காணலாம். ஆசிய நாடுகளாக இருக்கக் கூடிய இந்தியா, சீனா போன்ற நாடுகளில் வலுவான பண்பாட்டை இன்றும்
பின்பற்றி வருவதால் அந்நாடுகளில் நாகரிகம்
நிறைந்த மக்கள் மதிப்பும் மரியாதையும் பெற்று வாழ்கிறார்கள். உலகம் முழுவதும்
ஆசியாவின் பண்பாடும் கலாச்சாரமும் அதிக அளவு பேரும் புகழும் பெற்று விளங்குகின்றன.
ஆனால், இத்தருணத்தில் பொருளியல்
வளர்ச்சி அடைந்த மேல்நாடுகளில் வலுவான பண்பாட்டுப் பிடிப்பின்மையால் இன்றைய
மேல்நாட்டு இளையோர்கள் கட்டுப்பாட்டையும்
மனவொழுக்கத்தையும் இழந்து பல ஏற்க
முடியாத பழக்க வழக்கங்களையும் நடவடிக்கைகளையும் கையாண்டு வருகின்றனர். இத்தகைய
நவநாகரிகச் சூழ்நிலையில் நமது ஆழமான, வலுவான, உண்மையான,
நம்மை நல்வழிப்படுத்தும்
தமிழ்ப் பாரம்பரியப் பண்பாட்டினைக் கற்றுக்கொண்டு முறையாகப் பின்பற்றி வாழ்வது
அறிவுக் கூர்மையாகும் அல்லவா ?
சமுதாயத்தையே
பேணும் பண்பாடு
நம் சுயவளர்ச்சிக்கு மட்டும் உதவிக்கரம் நீட்டவில்லை இப்பாரம்பரியப்பண்பாடு.
சமுதாயவளர்ச்சிக்கும் சமுதாயத்தின் சாதனைகளுக்கும் உறுதுணையாக நிற்கின்றது. நமது
பண்பாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுவதால் விழாக்கள் மற்றும் பண்டிகைகளை எல்லாம்
கொண்டாடும் வேளையில் கண்களுக்குத் தென்படாத ஒரு சிறப்பு நிலவுகிறது. அதுவே
ஒற்றுமையைக் கடைப்பிடிப்பதற்கு வழியமைக்கிறது. ஒரு விழாவில் கலந்து கொள்ளும்
சமயத்தில் அவ்விழாவிற்கு வருகை புரியும் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன்
இன்முகத்துடன் கலந்துறவாடுகின்றபோது அவ்வினத்தைச் சார்ந்தவர்களிடையே சமூக
நல்லிணக்கத்தை ஏற்படுத்த பெரிதும் துணைபுரிகின்றது. அதனால்,
நமக்குத் தரப்படும் தமிழர் என்ற அடையாளம்
காக்கப்படுகின்றது. இந்தியர்களுக்கென தனிப்பட்ட பண்பாட்டினைப்
பின்பற்றும்போது நமது அடையாளத்தைத் தொலைப்பதற்கு வாய்ப்புகள் இருக்கா. அது மட்டுமின்றி
இப்பண்பாடுகளை ஒட்டிவரும் விழாக்களில் உறவினர்களைக் கண்டு உரையாடும் தருணத்தில்
தாய்மொழியில் உரையாட அதிக வாய்ப்பு உள்ளது. பண்பாட்டை உணர்ந்து உரையாடும்போது
அன்பு, பண்பு, சகிப்புத்தன்மை ஆகிய நற்குணங்கள்
போட்டிப்போட்டுக்கொண்டு வளரும். இத்தகைய பண்புகளைக் கொண்ட சமுதாயம்தான் ஆலமரம்போல் தழைக்கும்.
இந்தியப் பண்பாட்டைப் பின்பற்றும் இந்தியர்களும் தமிழர்களும் உலகச்
சமுதாயத்தின் பாராட்டைப் பெற்று இருப்பது ஊரறிந்த உண்மை. பெரியோரையும், முதியோரையும் போற்றிப் பேணுவது, `தாய் தந்தைப்பேண் `என்ற கொள்கையுடன் வாழ்வது ஆகியவை இன்று உலகைத் தமிழர் பக்கம் திரும்பிப் பார்க்க
வைத்துள்ளது.
கடந்த 2003ஆம் ஆண்டில் உலகின் மிகப்பெரிய பணக்கார
நாடுகளில் ஒன்றான பிரான்ஸில் 15,000 முதியவர்கள்
இறந்தனர். இதில் 10,000க்கும் மேற்பட்டோர் அனாதைப் பிணங்களாகச்
செத்துக்கிடந்தனர். இவர்களை அடக்கம் செய்யக்கூட உறவினர்கள் இல்லை. இதற்குக் காரணம்
என்ன? தனிக்குடும்ப நடத்தை,
``நாளொரு வண்ணம் பொழுதொரு
செயல்` என்ற வாழ்க்கை
மட்டுமல்லாது, குடும்ப உறவு
முறை சரியில்லாத நிலையிலும் நிகழ்ந்தவைதான் இவை. ஆனால், பலர் தன் தரப்பு வாதங்களை இதற்கு நேர்மாறாக
வைக்கின்றனர். ஆனால், குடும்ப உறவை
வளர்க்கும் நம் இந்திய தமிழ்ப்பண்பாட்டு முறையைக் கையாண்டால் மேற்கண்ட
அனாதைப்பிணம் என்ற அவலநிலை ஏற்படாது. நமது தமிழ்ப்பண்பாட்டில் முதியோரைப்பேணுதலும்,
இறந்தோருக்குச் செய்யும்
ஈமச்சடங்குகளும், இறந்ததற்குப்
பிறகும் பல ஆண்டுகள் செய்திடும் காரியங்களும் உலகோர் போற்றும் நற்செயல்களாகும்.
இத்தகைய ஈமச்சடங்குகள் கூடச் சமூக உறவை வளர்க்கின்றது; குடும்பப்
பந்தத்தைக் கட்டிக்காக்கின்றது.
காசி.வீராசாமி
விக்டோரியா தொடக்கக்கல்லூரி

No comments:
Post a Comment