Wednesday, January 4, 2017

புத்தாண்டே பொலிவோடு வருக!


உலகெங்கிலும் பிரச்சினைகள்! தீவிரவாதத் தாக்குதல்கள், மதப் போராட்டங்கள், இயற்கைப் பேரிடர்கள், உலகின் கவனத்தை ஈர்த்த மாபெரும் தலைவர்களிள் மறைவு, உள்நாட்டுக் குழப்பங்கள் எனப் பல்வேறு வகையான துன்பங்கள் உலகை உலுக்கிக் கொண்டிருக்கின்றன. இருந்தாலும் ஒவ்வோராண்டும் புத்தாண்டு புலர்வது நிற்பதில்லை. அதனை யாரும் நிறுத்தவும் முடியாது.
உலகில் வேண்டத்தகாத சம்பவங்கள் பல நிகழ்ந்தாலும் மக்கள் வேண்டும் நிகழ்வுகளும் தொடர்ந்து நடந்து கொண்டுதானிருக்கின்றன. உள்ளத்திற்கு உவகையூட்டும் நிகழ்வுகள் மிகுதியா? அல்லது உள்ளத்தை உருக்குலைக்கும் நிகழ்வுகள் அதிகமா? என்று சீர்தூக்கிப் பார்க்கின் உலகில் மக்கள் ஒன்றுகூடி ஒற்றுமையாக வாழும் உயர்வான சூழலே மிகுதி என்பதில் ஐயமில்லை. உலகின் நல்ல அச்சு வலிமையாக இருப்பதால்தான் உலகம் சமநிலையில் சுழன்று கொண்டிருக்கிறது. உலகில் நன்மைகள் அதிகமாகவும் நன்மை அல்லாதன குறைவாகவும்  விளங்குவதற்கு அந்த அச்சின் வலிமைதான்  அடிப்படைக் காரணமென்று கூறலாம். அந்த அச்சின் வலிமைகூட அறத்தின் அடிப்படைதான் அமைகிறது. உலகில் அறம் மேலோங்கி இருப்பதால்தான்  நன்மைகள் தடையின்றி கிடைக்கின்றன. மக்கள் கவலையின்றி வாழுகின்றனர்.
                        “சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
                        ஆக்கம் எவனோ உயிர்க்கு” (குறள் 31)
அறம் சிறப்பையும் செல்வத்தையும் அளிப்பதால் உலகில் வாழும் மாந்தர்க்கு அறத்தைவிட நன்மையளிப்பது வேறெதுவும் இல்லை என்பதுதான் திருவள்ளுவரின் கூற்றுமாகும். திருவள்ளுவர் கூறும் அறவழியில் அனைவரும் செயல்படத் தொடங்கினால் உலகில் ஒவ்வொரு நாளும் பொலிவைத் தரும் நாளாக அமையும். அத்தகைய ஒரு சூழலை உருவாக்கத்தான் உலக மக்களின் நலனில் அக்கறை கொண்ட தலைவர்களின் நோக்கமாகவும் இருக்கிறது. அந்த நல்ல சூழல் 2017ஆம் ஆண்டில் அமையுமென்று நம்புவோம்உலகத் தமிழுள்ளங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

அன்பன்                                                                                                                               பொன் சுந்தரராசு